ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் 3 போட்டிகளில் ஒரு வெற்றி 2 தோல்விகளை சந்தித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் தடுமாறும் சென்னை அடுத்ததாக டெல்லி அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி வரும் மார்ச் 5ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
டெல்லி அணியைப் பொறுத்த வரை இம்முறை அக்சர் பட்டேல் தலைமையில் விளையாடி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே 3 வகையான இந்திய அணியிலும் அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய ஆல் ரவுண்டராக விளையாடும் அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் நன்றாக விளையாட இந்தியா 17 வருடம் கழித்து கோப்பையை வெல்ல உதவினார்.
தோனியின் உதவி:
அதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு அக்சர் படேலுக்கு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பில் நேர்த்தியாக வழிநடத்தும் அவரது தலைமையில் டெல்லி 2 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று அசத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு கேப்டனாகவும் வீரராகவும் தாம் இந்தளவுக்கு வளர்வதற்கு எம்எஸ் தோனி நிறைய உதவியுள்ளதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இளம் வீரராக இருந்த போது தோனி தமக்கு நிறைய ஆலோசனைகள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். அத்துடன் 2021 டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்ட போதும் தோனி தமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக அக்சர் கூறியுள்ளார். இது பற்றி டெல்லி அணியின் ட்விட்டரில் அவர் பேசியது பின்வருமாறு.
அக்சர் படேல் பாராட்டு:
“மஹி பாயுடன் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இந்திய கேப்டனாக இருந்த போது அவருடன் எனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வேன். 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வென்ற அவரிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. இந்திய அணியின் ஆலோசகராக வந்த போது எனது மனநிலையை அவருடன் பகிர்ந்து கொண்டேன்”
இதையும் படிங்க: இந்திய ரசிகர்களை மதிக்கிறேன்.. இதை பாத்தா இந்தியாவை அடிக்க முடியாது.. ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் பேட்டி
“அப்போது என்னிடம் பேசிய அவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். தற்போது அதனுடைய முடிவுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். இன்று என்னிடம் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் மிகுந்த மாற்றங்களுக்கான பாராட்டுக்கள் எம்.எஸ். தோனிக்கு செல்லும். சில நேரங்களில் எப்படி உங்களுக்கு விக்கெட் கிடைக்கும் அல்லது எதிர்பாராத விஷயம் நடக்கும் என்பது பற்றி அவரிடம் ஐபிஎல் தொடரில் பேசியுள்ளேன்” எனக் கூறினார்.



