கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான 12-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்த மும்பை அணியானது அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.
டி20 கிரிக்கெட்டில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய சூரியகுமார் யாதவ் :
அதனை தொடர்ந்து இரண்டு தோல்விகளுடன் பின்தங்கிய நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தங்களது ஹோம் கிரவுண்டில் ஆதிக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தியது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய மும்பை அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 121 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக நான்காவது வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 9 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 27 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
அவர் அடித்த இந்த 27 ரன்கள் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் நேற்று அவர் அடித்த 27 ரன்களோடு சேர்த்து சர்வதேச டி20 போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் என அனைத்து வகையான டி20 போட்டிகளையும் சேர்த்து அவர் 8000 ரன்கள் கடந்துள்ளார்.
இதில் 6 சதங்கள் மற்றும் 54 அரைசதங்கள் அடங்கும். டி20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை உலகளவில் 8000 ரன்களை அதிவேகமாக அடித்த வீரராக ஆண்ட்ரே ரசல் முதலிடத்தில் இருக்கிறார். அவர் டி20 போட்டிகளில் 4,749 பந்துகளில் 8000 ரன்களை கடந்திருந்தார். அவருக்கு அடுத்து தற்போது சூரியகுமார் யாதவ் 5256 பந்துகளில் 8000 ரன்களை குவித்து அதிவேகமாக 8000 ரன்களை டி20 கிரிக்கெட்டில் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : யாரையும் சாதிக்க விடமாட்டீங்க அப்படித்தான.. மீண்டும் பாண்டியாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?
அதுமட்டும் இன்றி டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரராக விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான் , சுரேஷ் ரெய்னா ஆகியோரை தொடர்ந்து தனது பெயரை அந்த வரிசையில் சூரியகுமார் யாதவ் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



