ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் நிறைய இடம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதில் டெல்லி அணிக்காக அசுட்டோஸ் சர்மா லக்னோவுக்கு எதிராக பெற்று கொடுத்த வெற்றி பலரது பாராட்டுகளைப் பெற்றது. சில தினங்களுக்கு முன்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 210 ரன்களை துரத்திய டெல்லி 65-5 என ஆரம்பத்திலேயே தடுமாறியதால் தோல்வியை சந்திக்கும் என்று நம்பப்பட்டது.
ஆனால் அப்போது நிதானமாக விளையாடிய அசுட்டோஸ் சர்மா முதல் 20 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அடுத்த 11 பந்துகளில் சூறாவளியாக லக்னோவை புரட்டி எடுத்த அவர் மொத்தம் 66* (31) ரன்கள் விளாசி டெல்லிக்கு அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவருடன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகாம் ஆகியோரும் அதிரடி காட்டியதால் தங்களது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து டெல்லி சாதனை படைத்தது.
தவான், பீட்டர்சன் ஆலோசனை:
அந்தப் போட்டியின் முடிவில் தம்முடைய ஆலோசகர் ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் விருதை அசுட்டோஸ் அர்ப்பணிப்பத்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் சயீத் முஸ்தாக், விஜய் ஹசாரே, ரஞ்சி போன்ற உள்ளூர் தொடர்களில் தமது ஆட்டத்தை முன்னேற்ற நிறைய உழைத்ததாக அசுட்டோஸ் கூறியுள்ளார். குறிப்பாக சிக்ஸர்களை அடிக்க ஒரு நாளைக்கு 3 மணி நேரம் பயிற்சி எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பயிற்சியுடன் கெவின் பீட்டர்சன், ஷிகர் தவான், எம்எஸ் தோனி ஆகிய ஜாம்பவான்கள் தமக்கு கொடுத்த ஆலோசனை உதவிகள் பற்றி அசுட்டோஸ் பேசியது பின்வருமாறு. “போட்டியின் போது கெவின் பீட்டர்சனுடன் பேசினேன். களத்தில் என்னை வெளிப்படுத்த சொன்ன அவர் எனது சொந்த திறமைகளை நம்புமாறு சொன்னார். அவர் என் மீது நிறைய தன்னம்பிக்கைக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்”
தோனியின் ஆலோசனை:
“எனவே அவருக்கு என்னுடையக் கொண்டாட்டத்தை அர்ப்பணிக்க விரும்பினேன். நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்த போது அவர் உன்னால் முடியும் என்று என்னிடம் தொடர்ந்து சொன்னார். உச்சகட்ட அளவில் விளையாடிய மிகப்பெரிய வீரரான அவரிடம் கற்றுக் கொள்வது சிறப்பாக இருக்கிறது”
“கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடியது முதலே தவான் என்னுடைய ஆலோசகர். அப்போதிலிருந்து அவர் எனக்கு நிறைய உதவிகளைச் செய்து வருகிறார். மனதளவில் முன்னேற்றத்தைச் சந்திக்க உதவிய அவர் ஒவ்வொரு வீரரிடமும் வித்தியாசம் இருக்கும் ஆனால் உங்களது மனநிலை, தன்னம்பிக்கை தான் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்று சொன்னார். அது எனக்கு நிறைய உதவியது”
இதையும் படிங்க: 2024 முடிஞ்ச கதை.. அந்த 2 பேரை அமைதியா வெச்சிருந்தா போதும்.. ஆர்சிபியை சிஎஸ்கே வீழ்த்தும்.. பிளெமிங் பேட்டி
“எனது செயல்பாடுகளால் மகிழ்ச்சியுற்ற அவர் எப்போதும் பூமியில் பணிவாக இருக்க வேண்டுமென்று சொன்னார். கடந்த வருடம் சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாடிய போது தோனியிடமும் பேசினேன். களத்திற்கு சென்று போட்டியை முடிக்கும் போது உங்களது மனதில் என்ன ஓடும் கேட்டேன். அதற்கு தோனி நிறைய சொன்னார். அந்த ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன்” எனக் கூறினார்



