ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் குஜராத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 234-5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97, சசாங் சிங் 44*, பிரியான்ஸ் ஆர்யா 47 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக தமிழகத்தின் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய குஜராத் 20 ஓவரில் போராடி 232-5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 74, கேப்டன் சுப்மன் கில் 33, ஜோஸ் பட்லர் 54, ரூதர்போர்ட் 46 ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. பஞ்சாபுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ்:
அவரை விட ஜோஸ் பட்லர் – ரூத்தர்போர்ட் ஆகியோர் மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடியதால் பஞ்சாப் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது 15, 17வது ஓவர்களில் விஜயகுமார் வைசக் ஒய்ட் யார்கர்களை போட்டு வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்தது பஞ்சாப் வெற்றிக்கு வெற்றிக்கு வித்திட்டது. அது போக தனது சதத்தைப் பற்றி கவலைப்படாமல் சசாங் சிங் கடைசி ஓவரில் 23 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை ஸ்ரேயாஸ் வழங்கியதும் வெற்றிக்கு வித்திட்டது.
இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் தான் ஒய்ட் யார்கர்களை பயன்படுத்தலாம் என்ற திட்டத்தைக் கொடுத்ததாக ஸ்ரேயாஸ் கூறியுள்ளார். மேலும் முதல் பந்திலேயே பௌண்டரி அடித்தது மேற்கொண்டு அதிரடியாக விளையாடுவதற்கான உத்வேகத்தை தமக்குக் கொடுத்ததாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
உதவிய அர்ஷ்தீப்:
“ஓப்பனிங் போட்டியிலேயே 97* ரன்கள் அடித்து வெற்றியைப் பெற்றது எங்களுக்கு கேக் மேலே ஐஸ் வைத்ததைப் போன்றது. நான் எதிர்கொண்ட முதல் பந்தில் பவுண்டரி அடித்தது ரபாடாவுக்கு எதிராக சிக்சர் அடித்தது என்னை அப்படியே கொண்டு சென்றது. சசாங் 16 – 17 பந்தில் 44 ரன்கள் அடித்தது அணிக்கு முக்கியமாக அமைந்தது. பனி வந்ததால் விஷயங்கள் வேறு மாதிரி சென்றிருக்கலாம். ஆனால் அங்கே அவர் அசத்தினார்”
“வேடிக்கையான குணத்தை கொண்ட வைசாக் சரியான அணுகுமுறையுடன் நல்ல குணநலன்களை பெற்றுள்ளார். தேவைப்பட்ட போது அவர் யார்க்கர்களை உடனடியாக வீசினார். அந்த திட்டத்தில் அர்ஷ்தீப் முக்கிய பங்கு வகித்தார். பந்து கொஞ்சம் திரும்புவதால் அதன் மீது சலிவாவை பயன்படுத்துவது உதவும் என்று அவர் தான் சொன்னார். சாய் சுதர்சனை அவர் அவுட் செய்தது எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது”
இதையும் படிங்க: 11 ரன்ஸ்.. சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ்க்கு கிடைத்த பலன்.. போராடிய குஜராத்தை 3 ஓவரில் பஞ்சாப் சாய்த்தது எப்படி?
“மேலும் தாமதப்படுத்தாமல் ஒய்ட் யார்கர் பந்துகளைப் பயன்படுத்தலாம் என்று அவர் சொன்னார். தொடர் துவங்குவதற்கு முன் எங்களது வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை என்னிடம் சொன்னார்கள். நான் மட்டும் பேசவில்லை. இந்த வேகத்தை அடுத்தப் போட்டிகளிலும் எடுத்துச் செல்ல விரும்புகிறோம்” என்று கூறினார்.



