ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது முதல் போட்டியில் ராஜஸ்தானை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டி ஹைதராபாத் நகரில் மார்ச் 23ஆம் தேதி 3.30 மணிக்கு நடைபெற்றது. அதில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 20 ஓவரில் ராஜஸ்தானை அடித்து நொறுக்கி 286/6 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.
இசான் கிசான் 106*, அபிஷேக் சர்மா 24, ஹெட் 67, க்ளாஸென் 34, நிதிஷ் ரெட்டி 30 என அந்த அணியின் அனைத்து அதிரடி வீரர்களும் பெரிய ரன்கள் குவித்தனர். அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 242-6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 66, ஜுரேல் 70, ஹெட்மேயர் 42 ரன்கள் எடுத்தார்கள்.
பயமா இருக்கு:
அதனால் கடந்த வருடம் இறுதிப் போட்டியில் தோற்று நழுவ விட்ட கோப்பையை இந்த வருடம் பிடிக்கும் நோக்கத்துடன் ஹைதராபாத் அணி மீண்டும் அடித்து நொறுக்கி வெற்றிப்பாதையில் நடக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஒரு பவுலராக தங்களுடைய பேட்ஸ்மேன்களை நினைத்தால் தமக்கே பயமாக இருப்பதாக ஹைதராபாத் கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிரணிகள் யார் வந்தாலும் அடித்து நொறுக்கி இந்த வருடம் கோப்பையை வெல்வதற்கான ப்ளூ பிரிண்ட் தயாராக இருப்பதாகவும் அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார். இது பற்றி கமின்ஸ் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு நான் பவுலிங் செய்ய விரும்பவில்லை. அவர்களது ஆட்டம் நம்ப முடியாதது. அது பயமாக இருக்கிறது”
ப்ளூபிரிண்ட் ரெடி:
“அவர்களது ஆட்டம் பவுலர்களுக்கு கடினமாக இருக்கும். இப்படி பெரிய ரன்கள் குவிக்கும் போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எதிரணியிடமும் நீங்கள் ரன்கள் வழங்குவீர்கள். ஆனால் இவை அனைத்தும் அடுத்த ஓவருக்கு பேக்-அப் மற்றும் புத்துணர்ச்சியுடன் தயாராக இருந்து விளையாடுவதைப் பற்றியதாகும். அப்படி செய்வது வித்தியாசத்தை ஏற்படுத்தும்”
இதையும் படிங்க: தோனி உன்னை அடிக்கனும் அதை பாக்கனும்.. ரோஹித் சர்மாவின் ஃபிரீடம் கேப்டன்ஷி பற்றி ரமன்தீப் பேட்டி
“எங்களது முக்கிய வீரர்களை மீண்டும் தக்க வைக்க முடிந்தது. அதில் சிலரை தவற விட்டாலும் அவர்களுக்கு பதிலாக வந்த வீரர்களில் மகிழ்ச்சி. எடுத்துக்காட்டாக இசான் கிசான் இன்று அற்புதமாக விளையாடினார். நாங்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் விளையாட முயற்சிக்கிறோம். எங்களது பயிற்சியாளர்கள் ஒரு மாதமாகவே இத்தொடருக்காக தயாராகி வந்தனர். எங்கள் வீரர்கள் அனைவரும் ஃபிட்டாக, நெருப்பாக வந்துள்ளனர். அவர்களுக்கு நாங்கள் சுதந்திரமாக விளையாடும் ஆதரவைக் கொடுக்கிறோம். அது செய்வதை விட சொல்வது கடினம். ஆனால் எங்களுடைய வீரர்கள் இந்த வருடம் முழுவதும் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான ப்ளூ பிரிண்ட் உருவாக்கியுள்ளனர்” எனக் கூறினார்.



