ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அதில் சிஎஸ்கே அணிக்காக முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி அன்கேப்ட் வீரராக விளையாட உள்ளார்.
இந்தியாவுக்காக 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள தோனி 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார். இருப்பினும் தற்போது 43 வயதை தாண்டியுள்ள அவர் வருங்காலத்தை கருத்தில்க் கொண்டு சிஎஸ்கே கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்துள்ளார். அதனால் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறக்கூடும் என்ற நிலையில் தோனி விளையாடி வருகிறார்.
சச்சின் போல தோனி:
இந்நிலையில் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு சமீபத்தில் 51 வயதில் மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி கேப்டனாக கோப்பையை வென்ற ஜாம்பவான் சச்சின் போல தோனியும் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வெற்றிகளில் பங்காற்றுவார் என்று ருதுராஜ் கூறியுள்ளார். மேலும் அதிரடியாக சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மகிழ்விப்பதில் தோனி கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆர்வம் எப்போதும் அவரிடம் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் கூட தன்னுடைய 51வது வயதில் அன்று போல இன்றும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எனவே தோனிக்கும் நிறைய வருடங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். அது எனக்கும் எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கிறது”
சிக்ஸர்களில் கவனம்:
“43 வயதில் அவர் செய்யும் விஷயங்கள் குறிப்பிடத்தக்கது பாரதத்தக்கது என்று நினைக்கிறேன். அணிக்கு பங்காற்றக்கூடிய சிறந்த வழியை அவர் பார்க்கிறார். அதைக் கடந்த 2 வருடங்களாக நாம் பார்த்தோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இம்முறையும் முக்கியமான நேரங்களில் தோனி எங்களுக்கு முக்கியமான இன்னிங்ஸ் விளையாடுவார் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க: தோனியை யார்தான் கண்ட்ரோல் பண்ணாங்க? கத்துக் கொடுத்தவருக்கு சவால் கொடுப்பது பற்றி.. சூரியகுமார் பேட்டி
“தமது குறைந்தபட்ச வேலை என்ன என்பது தகுந்தாற்போல் அவர் பயிற்சிகளை செய்கிறார். ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்க முயற்சிப்பதே அவருடைய எளிமையானப் பயிற்சியாகும். சரியான வடிவத்தில் சரியான வேகத்தில் அதை அவர் செய்ய முயற்சிக்கிறார். நீண்ட காலம் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றாலும் அவர் சிறப்பாக விளையாடுவதற்கான வடிவத்தின் வெளியே இருப்பதில்லை. அந்த வகையில் ஸ்பெஷலான அவர் நீண்ட வருடங்களாக அசத்தி வருகிறார்” என்று கூறினார்.



