ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு குவிண்டன் டீ காக் 4 ரன்களில் ஹேசல்வுட் வேகத்தில் அவுட்டானார்.
ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் ரகானே அதிரடியாக விளையாடினார். அவருடன் மறுபுறம் தடுமாறிய சுனில் நரேன் கொஞ்ச நேரத்திற்கு பின் தமது பங்கிற்கு அதிரடி காட்டினார். அந்த வகையில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது.
மடக்கிய பெங்களூரு:
அதனால் 10 ஓவரில் 107/1 என்ற வலுவான துவக்கத்தைப் பெற்ற கொல்கத்தா குறைந்தது 230 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நரேன் 44 (26) ரன்களில் ரசிக் சலாம் சுழலில் சிக்கினார். அதே போல மறுபுறம் அரை சதத்தை அடித்த ரகானேவை 56 (31) ரன்னில் அவுட்டாக்கிய க்ருனால் பாண்டியா அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயரை 6 (7) ரன்னில் வேகமான பந்தால் போல்ட்டாக்கினார்.
அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த ரிங்கு சிங்கையும் 4 ரன்னில் அவுட்டாக்கி அசத்தினார். அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் 4 ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த ரகுவன்சி 30 (22) ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் கொல்கத்தாவை 20 ஓவரில் 174-8 ரன்களுக்கு பெங்களூரு மடக்கிப் பிடித்தது.
ஹிட் விக்கெட் எஸ்கேப்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 2, க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். முன்னதாக அந்தப் போட்டியில் ரசிக் சலாம் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தை சுனில் நரேன் எதிர்கொண்டார். அந்தப் பந்து ஒயிடாக வீசப்பட்டதால் அதை அவர் அடிக்கவில்லை.
இதையும் படிங்க: 22 யார்டின் கிங் 18 வருட ஓஜி.. கோட் விராட் கோலியை பாராட்டி நடனமாடிய ஷாருக்கான்.. பிசிசிஐ ஸ்பெஷல் பரிசு
அதைப் பார்த்ததும் களத்தில் இருந்த நடுவர் ஒயிட் கொடுத்தார். அடுத்த நொடியே பந்தை எதிர்கொண்ட வேகத்தில் சுனில் நரேன் பேட் அவரை அறியாமலேயே பின்னே சென்று ஸ்டம்ப்பில் பட்டு பெய்ல்ஸ் கீழே விழுந்தது. அதன் காரணமாக ஹிட் விக்கெட் முறையில் அவர் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்து ஒயிட் என்று சில நொடிகள் முன்பாக நடுவர் அறிவித்து விட்டார். அதனால் அந்த பந்து காலாவதியானதன் காரணமாக சுனில் நரேன் ஹிட் விக்கெட் முறையில் தப்பி தொடர்ந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.



