ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. அதனால் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கில், ராகுல் உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர்.
ஆனால் அவர்கள் அனைவரையும் விட 4வது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பத்திலேயே ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து விக்கெட்டை இழந்தார். அப்போதெல்லாம் மிடில் ஆர்டரில் அற்புதமாக விளையாடிய அவர் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து காப்பாற்றி வெற்றிகளில் பங்காற்றினார்.
சைலன்ட் ஹீரோ:
அதனாலேயே இந்த சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல ஸ்ரேயாஸ் ஐயர் சைலண்ட் ஹீரோவாக செயல்பட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டினார். அந்த வகையில் மொத்தமாக இந்தத் தொடரில் 5 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார். அத்துடன் ஒரு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் 2006 சாம்பியன்ஸ் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் டேமின் மார்ட்டின் மிடில் ஆர்டரில் விளையாடி 241 ரன்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும். இது போக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எவ்வளவு சவால் கொடுக்கக்கூடியது என்பதை அனைவரையும் அறிவோம். அப்படிப்பட்ட அந்த அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் 103, 52, 62, 80, 49, 33, 105, 79, 48 ரன்கள் அடித்துள்ளார்.
நியூஸிலாந்தை பார்த்தாலே:
குறிப்பாக 2023 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மும்பையில் நியூசிலாந்தை புரட்டி எடுத்த ஸ்ரேயாஸ் 105 ரன்கள் விளாசினார். அப்படியே இந்த சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றில் 79 ரன்கள் அடித்த அவர் மாபெரும் இறுதிப்போட்டியில் 48 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். மொத்தத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் 67.88 என்ற அபாரமான சராசரியில் ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க: 13க்கு 13 வெற்றி.. கங்குலி, ஜேக் காலிஸ் சாதனை சமன்.. தோனியை முந்திய ரோஹித்.. ஐசிசி தொடரில் ஸ்பெஷல் சாதனை
இதிலிருந்து நியூசிலாந்தை பார்த்தாலே ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கிறார் என்று சொல்லலாம். அல்லது நியூசிலாந்து என்றால் அடிப்பதற்கு என்னை கூப்பிடுங்கள் என்ற வகையில் அவர் அபாரமாக விளையாடி வருகிறார் என்றும் சொல்லலாம். அப்படி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வெல்ல உதவியதால் மீண்டும் அவருக்கு பிசிசிஐ இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இடம் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



