ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அமைந்துள்ளது. அதனால் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா சாதனை படைத்துள்ளது. அந்த வெற்றிக்கு நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 50+ ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சௌரவ் கங்குலி சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2000 சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் இதே நியூசிலாந்துக்கு எதிராக சௌரவ் கங்குலி 117 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையும் ரோஹித் படைத்துள்ளார்.
நாயகன் ரோஹித்:
மேலும் ஏற்கனவே 2023 உலகக் கோப்பையில் ஆட்டநாயகன் விருது வென்றுள்ள ரோகித் 2024 டி20 உலகக் கோப்பையிலும் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதன் வாயிலாக உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, டி20 உலகக் கோப்பை ஆகிய அனைத்து விதமான ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் குறைந்தது ஒரு ஆட்டநாயகன் விருது வென்ற முதல் கேப்டன் என்ற சாதனை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் 2015 உலகக்கோப்பை காலிறுதி, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதி, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் ரோஹித் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐசிசி தொடர்களில் காலிறுதி அரையிறுதி, இறுதி ஆகிய அனைத்து விதமான நாக் அவுட் போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற ஜேக் காலிஸ் உலக சாதனையையும் ரோகித் சமன் செய்துள்ளார்.
தோனியை முந்திய ரோஹித்:
இது போக ஐசிசி தொடர்களில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா (சேனா) ஆகிய அணிகளுக்கு எதிராக ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐசிசி தொடரில் சேனா நாடுகளுக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இவை அனைத்தையும் விட 2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக ரோஹித் 8 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார்.
இதையும் படிங்க: 5க்கு 5.. டாஸ் அதிர்ஷ்டம் இல்லனா என்ன? துபாயை கோட்டையாக்கி.. ஐசிசி தொடரில் இந்தியா உலக சாதனை
அப்படியே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் 5 வெற்றிகளை பெற்ற அவர் ஐசிசி தொடரில் தொடர்ந்து அதிகப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2012 – 2014 காலகட்டங்களில் தோனி 12 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றதே முந்தைய சாதனை. தற்போது 13 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று ரோகித் அந்த சாதனையை உடைத்துள்ளார்.



