அந்த அதிர்ஷ்டம் கிடைச்சும் இந்தியாவிடம் விட்டுட்டோம்.. கோலி வெற்றியை பறிச்சுட்டாரு.. ரிஸ்வான் வருத்தம்

Mohammad Rizwan
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 49.4 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சௌத் ஷாக்கீல் 69, கேப்டன் ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்தனர்.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 20 ரன்களில் அவுட்டானாலும் சுப்மன் கில் 46 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நங்கூரமாக விளையாடி பாகிஸ்தானுக்கு சவாலைக் கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அதில் ஸ்ரேயாஸ் 56, விராட் கோலி 100* ரன்கள் எடுத்ததால் 42.3 ஓவரில் 244-4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 2 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. அத்துடன் 2017 ஃபைனலில் தோல்வியை கொடுத்த பாகிஸ்தானை இத்தொடரிலிருந்து இந்தியா கிட்டத்தட்ட நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி, கில் ஆகியோர் தங்களது வெற்றியைப் பறித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரிஸ்வான் வருத்தம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் டாஸ் வெற்றி பெற்றோம். ஆனால் டாஸ் வெற்றி பெற்றப் பயனை பெறவில்லை. நாங்கள் 280 ரன்கள் அடிக்க முயற்சி செய்தும் இந்தியாவின் பவுலர்கள் நன்றாக பவுலிங் செய்தனர். நானும் ஷாக்கீலும் சேர்ந்து போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுடைய ஷாட் செலக்சன் சுமாராக இருந்ததால் விக்கெட்டுகளை இழந்தோம்”

இதையும் படிங்க: 23 ரன்களே அடித்தாலும் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய பாபர் அசாம் – விவரம் இதோ

“அதனாலேயே 240 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அப்ரார் எங்களுக்கு விக்கெட்டை கொடுத்தார். அதைப் பயன்படுத்தி வெற்றியைப் பிடிக்க முயற்சித்த போது விராட் கோலி மற்றும் கில், ஸ்ரேயாஸ் ஆகியோர் போட்டியை எங்களிடம் இருந்து பறித்துச் சென்றனர். நாங்கள் ஃபீல்டிங் செய்வதில் முன்னேற வேண்டும். இந்தப் போட்டியில் நிறைய தவறுகள் செய்தோம்” என்று கூறினார்.

Advertisement