பாகிஸ்தான் மண்ணில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி சென்று விளையாடுமா என்பது தற்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக இருக்கிறது. ஏனெனில் 2008க்குப்பின் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா 2023 ஆசிய கோப்பையிலும் தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.
அதே போல இம்முறையும் தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாயில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்து வருகிறது. மறுபுறம் இந்தியா வராமல் போனால் ஸ்பான்சர்ஷிப் வருமானங்கள் வெகுவாக பாகிஸ்தான் வாரியத்திற்கு குறைந்து விடும். அதனால் இந்தியா தங்களுடைய நாட்டில் வந்து விளையாடுவதையே பாகிஸ்தான் விரும்புகிறது.
தவமாக இந்தியா:
ஆனாலும் இந்திய அணி அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் வேறு வழியின்றி சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கு இந்திய அணியும் விராட் கோலியும் தவமாக இருப்பதாக முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பாகிஸ்தான் மண்ணில் வந்து இந்திய அணி விளையாடுவதற்கு பாகிஸ்தானை விட இந்தியா தவமாக இருக்கிறது. விராட் கோலியும் ஒருவேளை பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கு தவமாக இருக்கக்கூடும். நான் பிசிசிஐயுடன் சேர்ந்து இந்தியாவில் வேலை செய்துள்ளேன். ஒருவேளை பாகிஸ்தான் மண்ணில் இந்தியா காலடி வைத்தால் அவர்களுடைய தொலைக்காட்சி உரிமங்கள் மற்றும் ஸ்பான்சர்சிப் கூரையைத் தாண்டி செல்லும்” என்று கூறினார்.
அக்தர் ஆதங்கம்:
அப்போது அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் “இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாமல் இருப்பதற்கான காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு “அவர்களுடைய அரசு பாகிஸ்தானுக்கு வந்து விளையாட விரும்பவில்லை” என்று சோயப் அக்தர் ஆதங்கத்துடன் பதிலளித்தார். அதாவது பாகிஸ்தானில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
இதையும் படிங்க: அடிலெய்ட் மைதானத்தின் கில்லி விராட் கோலி.. 2வது டெஸ்டில் அசத்தி ப்ராட்மேன் சாதனையை சமன் செய்வாரா?
எனவே அவர்களை மகிழ்விப்பதற்காகவே விராட் கோலி மற்றும் இந்திய அணியினர் பாகிஸ்தான் மண்ணில் விளையாட விரும்புவதாக சோயப் அக்தர் கூறியுள்ளார். ஆனாலும் பிசிசிஐ மற்றும் இந்திய அரசு அதற்கு தடையாக இருப்பதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே ஜெய் ஷா ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ளதால் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவதற்கான வாய்ப்பு முற்றிலும் குறைந்து போயுள்ளது.



