ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்கும் இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இந்தியா தயாராகி வருகிறது.
அந்தப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலியா போராட உள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. எனவே அந்த உத்வேகத்துடன் இரண்டாவது போட்டியிலும் விளையாடி வெற்றி காண இந்திய அணியினர் பயிற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
அடிலெய்ட் கில்லி:
அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சவாலாக இருப்பார் என்று உறுதியாக நம்பலாம். ஏனெனில் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி தம்முடைய கேரியரில் 15 சர்வதேச இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். அதில் 957 ரன்களை 73.61 என்ற சராசரியில் குவித்துள்ள அவர் 5 சதங்கள் 4 அரை சதத்தை அடித்துள்ளார்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அங்கே 8 இன்னிங்ஸில் விளையாடியுள்ள விராட் கோலி 3 சதங்கள் 1 அரை சதம் உட்பட 509 ரன்களை 63.62 என்ற சராசரியில் குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கு நடந்த போட்டியில் 2 இன்னிங்ஸிலும் அவர் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். அந்த வகையில் இந்த மைதானத்தில் அவர் கில்லியாக செயல்பட்டு வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது.
ப்ராட்மேன் சாதனை:
அதனாலேயே இந்தியாவுக்கு வெளியே அடிலெய்ட் தமக்கு மிகவும் பிடித்த மைதானம் என்று விராட் கோலி 2022லயே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இம்முறை தமக்கு மிகவும் ராசியான அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி சதத்தை அடிக்க முயற்சிப்பார் என்று நம்பலாம். அப்படி சதத்தை அடித்தால் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் தன்னுடைய 11வது சர்வதேச சதத்தை பதிவு செய்வார்.
இதையும் படிங்க: பிரித்திவி ஷா இதை செஞ்சா இந்திய கிரிக்கெட்டின் ஹீரோவாகலாம்.. பீட்டர்சன் போல ஷேன் வாட்சனும் அட்வைஸ்
அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற டான் பிராட்மேன் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்வார். இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் ஜாம்பவான் ப்ராட்மேன் அவர்கள் 11 சதங்களை அடித்து அந்த சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அதை விராட் கோலி சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.



