ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 259 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறாததால் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜெய்ஸ்வாலை பார்க்கும் போது என்னை பார்த்தது மாதிரியே இருந்தது :
அந்தவகையில் இரண்டாவது இன்னிங்சின் போது 297 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 161 ரன்கள் குவித்து அசத்தினார். அதேவேளையில் மற்றொரு துவக்க வீரரான ராகுல் முதல் இன்னிங்ஸில் 26 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 176 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரியுடன் 77 ரன்கள் குவித்து அசத்தினார்.
இவர்கள் இருவரது இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதமடித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கே.எல் ராகுல் அவருக்கு தான் எவ்வாறு உதவினேன் என்பது குறித்தும் பேசி இருக்கிறார். இது பற்றி கே.எல் ராகுல் கூறியதாவது :
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான போது முதல் முறையாக ஆஸ்திரேலியா வந்த போது எப்படி இருந்தேனோ ஜெய்ஸ்வாலும் அதே போல் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நேரத்தில் என்னுடன் துவக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் ஆஸ்திரேலியா மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கினார்.
அதேபோன்று களத்தில் இருக்கும் போதும் அவர் என்னை நிதானப்படுத்தி ரன்களை குவிக்க திட்டங்களையும் வகுத்துக் கொடுப்பார். அந்த வகையில் முரளி விஜய் எனக்கு செய்த உதவியை நான் ஜெய்ஸ்வாலுக்கு செய்ய விரும்பினேன். ஏனெனில் முதல் முறையாக அவர் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுவதால் நிதானத்தை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதற்காக அவருக்கு ஆலோசனைகளை கொடுத்து எப்படி விளையாட வேண்டும் என்று சூழலை கணிக்க உதவி செய்தேன் என கே.எல் ராகுல் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பெர்த் டெஸ்ட் வெற்றி.. மீண்டும் முதலிடம் பிடித்த இந்தியா.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல – என்ன வழி?
தற்போது 22 வயதான இளம் வீரர் ஜெயஸ்வால் ஏற்கனவே இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலியா மண்ணிலும் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்துள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளதோடு அவர் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார் என்ற பெயரையும் இந்த இன்னிங்ஸ் அவருக்கு பெற்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



