இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் வென்ற இந்தியா 2 – 1* (4) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே நான்காவது போட்டியில் வென்று சொந்த மண்ணில் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய தென்னாப்பிரிக்கா போராட உள்ளது.
மறுபுறம் கடைசிப் போட்டியிலும் வென்று தொடரை வெல்ல இந்திய அணி போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்தப் போட்டி நவம்பர் 15ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் உள்ள வாண்ட்ரெர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 1956 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்ற வரும் இம்மைதானத்தில் 2005 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
வாண்ட்ரெர்ஸ் மைதானம்:
வரலாற்றில் இங்கு மொத்தம் 33 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த மைதானத்தில் இந்தியா வரலாற்றில் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியா கடைசியாக இங்கு தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட போட்டியிலும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
வெதர் ரிப்போர்ட்:
அந்த வகையில் இந்தியாவுக்கு ராசியாகவே இருக்கும் இம்மைதானத்தில் நவம்பர் 15ஆம் தேதி மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
வாண்ட்ரெர்ஸ் மைதானம் வரலாற்றில் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. இங்க நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். அதே சமயம் துல்லியமாக பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் கணிசமான விக்கெட்டுகளை எடுப்பார்கள். போட்டி நடைபெற நடைபெற ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இதையும் படிங்க: சரியான நேரம் இதுதான் என நினைக்கிறன்.. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த – டிம் சவுதி
கடைசியாக இங்கு நடைபெற்ற போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா வெற்றி பெற உதவினார். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 174. இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளில் 16 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 17 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எதைத் தேர்ந்தெடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.



