டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றிலுமாக கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கும் நியூசிலாந்து அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலும் முன்னேற்றத்தை காண விரும்புகிறது.
ஓய்வை அறிவித்தார் நியூசி வீரர் டிம் சவுதி :
இதன் காரணமாக தற்போது அந்த அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள அந்த அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி அந்த தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறியதாவது : நான் சிறுவயதில் இருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன். அந்த வகையில் கடந்த 18 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கௌரவம் என்று நான் கருதுகிறேன்.
தற்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன். கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருந்தாலும் இதுதான் நான் விலக சரியான நேரம் என்று நினைக்கிறேன். பல ஆண்டு காலமாக எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உறுதுணையாக இருந்த நண்பர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி உள்ளனாக இருப்பேன்.
இந்த கிரிக்கெட் பயணம் எனக்கு நம்ப முடியாத ஒன்றாக இருந்தது என டிம் சவுதி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகள், 161 ஒருநாள் போட்டிகள் மற்றும் 126 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 3 விக்கெட்ஸ்.. வெ.இ அணியை ஹாட்ரிக் போட்டியில் வீழ்த்திய இங்கிலாந்து.. 2019க்குப்பின் சாதனை வெற்றி
தற்போது 35 வயதை எட்டியுள்ள டிம் சவுதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவார் என்று நம்பலாம்.



