நியூசிலாந்தில் ஃபோர்ட் கோப்பை 2024 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் ஒட்டாகோ மற்றும் கேன்ட்டர்பரி அணிகள் மோதின. கிறிஸ்ட்சர்ச் நகரில் அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஒட்டாகோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து விளையாடிய கேன்ட்டர்பரி அணிக்கு ஹென்றி நிக்கோலஸ் 0, மரியோ 10, மிட்சேல் ஹே 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் எதிர்ப்புறம் மற்றொரு துவக்க வீரர் சாட் பௌஸ் ஒட்டாகோ பவுலர்களை ஆரம்பத்தில் நிதானமாக எதிர்கொண்டு 26 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். நேரம் செல்ல செல்ல சரமாரியாக அடித்து நொறுக்கிய அவர் 53 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார்.
புதிய உலக சாதனை:
தொடர்ந்து எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் ருத்ரதாண்டவம் ஆடிய அவர் அடுத்த 50 பந்துகளில் இரட்டை சதத்தை அடித்தார். இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதத்தை அடித்த வீரர் என்ற இந்தியாவின் நாராயண் ஜெகதீசன் மற்றும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சாதனைகளை பௌஸ் உடைத்து புதிய உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன் கடந்த 2022 விஜய் ஹசாரே கோப்பையில் அருணாச்சல பிரதேஷ் அணிக்கு எதிராக தமிழ்நாடு வீரர் நாராயணன் ஜெகதீசன் 114 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். அதே போல 2021 – 22 மார்ஷ் கோப்பையில் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிராக தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக டிராவிஸ் ஹெட் 114 பந்துகளில் இரட்டை சதத்தை பதிவு செய்திருந்தார். தற்போது அந்த இருவரின் உலக சாதனைகளையும் சாட் பௌஸ் உடைத்துள்ளார்.
அதிரடி நியூஸிலாந்து வீரர்:
அந்த வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் 27 பவுண்டரி 7 சிக்ஸருடன் 205 (110) ரன்களை 186.36 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். அவருடன் ஜக்காரி போல்க்ஸ் 49* ரன்கள் எடுத்ததால் 50 ஓவரில் கேன்ட்டர்பரி 343-9 ரன்கள் குவித்தது. ஒட்டாகோ அதிகபட்சமாக மேத்தியூ பேகான் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் ஜடேஜாவுக்காக தப்பு பண்ணிடாதீங்க.. அந்த 3 பேருடன் அஸ்வின் தேவை.. பிரட் லீ அட்வைஸ்
இறுதியில் 344 ரன்களை துரத்திய ஒட்டாகோ சுமாராக விளையாடி 24.5 ஓவரில் 103 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக லுக் ஜார்ஜ்சன் 34 ரன்கள் எடுத்த நிலையில் கேன்ட்டர்பரி அணிக்கு அதிகபட்சமாக சீன் டேவி, மைக்கேல் ரிப்போன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அப்படி மிகப்பெரிய உலக சாதனையை படைத்த பௌஸ்க்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



