வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற இந்திய அணி போராட உள்ளது.
அதற்கு சவாலை கொடுத்து 2014க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவும் தயாராகி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் எப்போதும் வேகத்துக்கு சாதகமாக மைதானங்கள் இருப்பது வழக்கமாகும். அதனால் இந்தியா பெரும்பாலும் 3 முழுநேர வேகப்பந்து வீச்சாளர்கள், 1 வேகப்பந்து ஆல் ரவுண்டர், 1 ஸ்பின்னருடன் விளையாடுவது வழக்கமாகும்.
பிரட் லீக் அறிவுரை:
அது போன்ற சூழ்நிலையில் ஸ்பின்னராக அஸ்வினுக்கு பதிலாக ரவிச்சந்திர ஜடேஜாவை இந்தியா தேர்ந்தெடுப்பது வாடிக்கையாகும். இத்தனைக்கும் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த அனுபவம் கொண்ட அஸ்வின் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் ஸ்பின்னராக இருக்கிறார். ஆனால் வெளிநாடுகளில் சரிப்பட்டு வர மாட்டார் என்ற எண்ணத்துடன் அஸ்வினை இந்தியா கழற்றி விட்டு வருகிறது.
சொல்லப்போனால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வினை இந்தியா கழற்றி விட்டது. கடைசியில் அதுவே தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு ஆஸ்திரேலியாவில் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் அஸ்வின் விளையாடுவது அவசியம் என்று ஜாம்பவான் பிரட் லீக் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் முக்கியம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அஸ்வின் 600 விக்கெட்டுகளை நெருங்கி வருகிறார். பந்துகளை வீசும் போது அவரிடம் அழகான வடிவம் இருக்கிறது. அவரால் புதிய பந்திலும் வீச முடியும். இந்தியா இங்கே வெற்றி பெறுவதற்கு முகமது ஷமி சாவியை வைத்திருப்பார். ஜஸ்ப்ரித் பும்ரா எந்தளவுக்கு சிறந்தவர் என்பது நமக்கு தெரியும். இரு பக்கமும் வீசக்கூடிய அவர் ரிவர்ஸ் ஸ்விங்கை ஏற்படுத்த முடியும்”
இதையும் படிங்க: ஷமி குணமடையலன்னா ஆஸ்திரேலியாவில் இந்தியா ஜெய்க்க அவரை விளையாட வைங்க.. பிரட் லீ கருத்து
“புதிய பந்தை எப்படி பேச வைப்பது என்பது முகமது சிராஜ்க்கு தெரியும். பெர்த், அடிலெய்ட் போன்ற மைதானங்களில் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஸ்பின்னராக அஸ்வின் விளையாடுவது என்னைப் பொறுத்த வரை சிறந்த கலவையாக இருக்கும். அதன் பின் அவர்கள் 2 பகுதி நேர ஸ்பின்னர்களை கொண்டிருக்கலாம். ஆனால் இங்கே இந்தியா நெருப்பாக விளையாடி வெற்றி பெறுவதற்கு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை” என்று கூறினார்.



