ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் துவங்குகிறது. மிகவும் சவாலான ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய இரண்டு தொடர்களையும் இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் முதல் முறையாக அடுத்தடுத்து வென்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த தொடர்களில் ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடியது. ஆனால் இம்முறை 1992க்குப்பின் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட மெகா தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதே போல வரும் 2025 ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
இந்தியாவின் சவால்:
அதற்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிராக அக்டோபர் 16 முதல் சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற உள்ள 10 போட்டிகள் தான் உண்மையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாகவும் சோதனையாகவும் இருக்கும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அதில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் ரிஷப் பண்ட் இந்தியாவின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருப்பார் என்றும் கங்குலி கணித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது மிகப்பெரிய சவால். முதலில் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகளில் விளையாடும் இந்தியா அடுத்ததாக இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது”
துருப்புச் சீட்டு பண்ட்:
“அவை 2 தான் இந்தியாவுக்கு மிகவும் கடினமான சவாலாக இருக்கும். ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான வீரர். அவர் அந்தத் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார்” என்று கூறினார். அதே சமயம் அடுத்து நடைபெறும் நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்திய அணி வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெல்லும் என்று கங்குலி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 2022க்குப்பின் 0%.. ஹாட்ரிக் முறை.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாக் ஏணி வெச்சாலும் எட்டாத உச்சத்தில் இந்தியா
அவர் கூறுவது போல ரிசப் பண்ட் கடந்த காலங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதமடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் சமீபத்திய வங்கதேச தொடரில் சதமடித்து விட்ட இடத்திலிருந்து துவங்கியுள்ளார். எனவே ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் ரிஷப் பண்ட் இந்தியாவின் வெற்றிக்காக போராடுவார் என்று நம்பலாம்.



