இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. சமீப காலங்களில் படுதோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இத்தொடரிலாவது வெல்லுமா என்று அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்பட்டது. ஆனால் முல்தானில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.
இத்தனைக்கும் அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்தது. ஆனால் அடுத்து விளையாடிய இங்கிலாந்து தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கி 823-7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து உலக சாதனை படைத்தது. பின்னர் பாகிஸ்தானை 220 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
பாதாளத்தில் பாகிஸ்தான்:
மறுபுறம் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்துள்ளது. இதனால் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் கடந்த 1331 நாட்களாக சொந்த மண்ணில் பாகிஸ்தான் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்லவில்லை.
அத்துடன் 2022க்குப்பின் சொந்த மண்ணில் அதிக விகிதத்தில் வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியலில் தென்னாபிரிக்கா 87.50%, இந்தியா 76.92%, ஆஸ்திரேலியா 75.00%, இங்கிலாந்து 73.68%, இலங்கை 63.44% டாப் 5 இடங்களில் உள்ளன. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளும் முறையே 58.33%, 33.33%, 30.00% சதவிகிதங்களுடன் அடுத்த இடங்களில் உள்ளன. ஆனால் பாகிஸ்தான் மட்டும் 0 சதவீதத்துடன் கடைசி இடத்தில் திண்டாடுகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
இது போக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 16.67% புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான் கடைசி இடத்திற்கு சரிந்துள்ளது. 74.34% புள்ளிகளுடன் முதலிடத்தில் இந்தியா ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 62.50%, இலங்கை 55.56%, இங்கிலாந்து 45.59%, தென்னாபிரிக்கா 38.89%, நியூசிலாந்து 37.50%, வங்கதேசம் 34.38%, வெஸ்ட் இண்டீஸ் 18.52% புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதையும் படிங்க: வங்கதேச தொடர் முடிந்தும் ஓயப்போவது இல்லை.. டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க சூரியகுமார் – எடுத்துள்ள முடிவு
ஏற்கனவே 2021, 2023 ஆகிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பாகிஸ்தான் தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த நிலையில் தற்போது கடைசி இடத்தை பிடித்துள்ளதால் அடுத்து வரும் போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் 2025 ஃபைனலுக்கு தகுதி பெற முடியாது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற வேண்டும் என்ற பாகிஸ்தானின் கனவு தொடர்ந்து ஹாட்ரிக் முறையாக உடைந்து போயுள்ளது.



