வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் 1 – 0* (3) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்த தொடரில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ், ரிஷப் பண்ட் போன்ற நிறைய இளம் வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் துவக்க வீரராக அபிஷேக் சர்மா மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
அதனால் 2வது துவக்க வீரராக யார் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் அந்த வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பு பெறாத அவர் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு அசத்தியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் அவ்வப்போது துவக்க வீரராக களமிறங்கி அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சன் வாய்ப்பு:
அதன் காரணமாக புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதுமையாக சிந்தித்து அவருக்கு துவக்க வீரராக வாய்ப்பளித்துள்ளார். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் 6 பவுண்டரிகளை அடித்த சஞ்சு சாம்சன் 29 (19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் இத்தொடரில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைய கூடாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
ஒருவேளை இந்த வாய்ப்பில் பெரிய ரன்கள் குவிக்க தவறினால் ஓப்பனிங்கிலும் அசத்தவில்லை என்று சொல்லி உங்களை கெளதம் கம்பீர் கழற்றி விடலாம் என்றும் சஞ்சு சாம்சனை அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “அபிஷேக் ஷர்மா ரன் அவுட்டாகும் வரை முதல் போட்டியில் அபாரமாக விளையாடினார். ஆனால் சஞ்சு சாம்சன் எப்படி விளையாடினார்”
ட்ராப் பண்ணிடுவாங்க:
“சஞ்சு சாம்சன் விளையாடவில்லையெனில் அது இந்தியாவுக்கு தான் இழப்பு என்று கௌதம் கம்பீர் நீண்ட காலத்திற்கு முன் கூறியுள்ளார். அதனாலேயே தற்போது அவரை துவக்க வீரராக களமிறக்கியுள்ளார். ஆனால் அவர் பந்தை கடினமாக அடிக்கவில்லை. பந்துக்கு வலிக்கக்கூடாது என்பது போல் விளையாடிய அவர் சில பவுண்டரிகளை அடித்தார்”
இதையும் படிங்க: 20 லட்சத்திலிருந்து 11 கோடியாக உயரப்போகும் மாயங்க் யாதவின் சம்பளம் – எப்படி தெரியுமா?
“மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பந்தை அடித்த போது சஞ்சு சாம்சன் மட்டும் கவனத்துடன் அடித்தார். அப்படி முதல் போட்டியில் 29 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்ற சஞ்சு சாம்சன் அங்கிருந்து இன்னும் கொஞ்சம் சென்றிருக்க வேண்டும். அவர் இன்னும் கொஞ்சம் ரன்கள் அடிக்க வேண்டும். இல்லையேல் அவரை அணி நிர்வாகம் நீக்கி விடுவார்கள். அல்லது கடைசி வரை இந்திய அணியில் இப்படியே மேலும் கீழும் உள்ளே வெளியே இருக்க வேண்டும்” என்று கூறினார்.


