அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இந்திய ரசிகர்கள் மத்தியிலும், உலக மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால் ஆண்டுக்கு ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
தோனியின் முடிவு என்ன? :
இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஏற்பாடுகளை தற்போது பிசிசிஐ மும்முரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தற்போது 43 வயதை எட்டியுள்ள சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் சாம்பியன் கேப்டனான அவரது ஆட்டத்தை காண இன்றளவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் அன்புக்காகவும், பாசத்திற்காகவும் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவதாக அறிவித்துள்ள தோனி இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் அதிகளவில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று ஏற்கனவே நிர்வாகம் அறிவித்துள்ள வேளையில் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப்போகிறது என்பது குறித்து அனைத்து அணிகளும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தங்களது பட்டியலை வெளியிட வேண்டும். அந்த வகையில் சிஎஸ்கே அணி வெளியிடும் பட்டியலில் தோனியின் பெயர் அன் கேப்டு பிளேயராக தக்க வைக்கப்பட்டால் அவர் அடுத்த ஆண்டு விளையாடுவது உறுதி.
இதையும் படிங்க : 189 ஸ்ட்ரைக் ரேட்.. 53 ரன்ஸ்.. அமெரிக்காவில் ஷாகிப்பை வெளுத்த சுரேஷ் ரெய்னா.. வயதானாலும் மாறாத ஸ்டைல்
இல்லையெனில் அவர் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. அதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் கடைசி சில நாட்களுக்கு முன்பாக சென்னை அணியின் நிர்வாக உறுப்பினர்களை சந்திக்க இருக்கும் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை உறுதி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இம்மாத இறுதியில் தோனியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.



