இராணி கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 1 முதல் லக்னோவில் நடைபெற்ற வருகிறது. அதில் ரஞ்சிக் கோப்பை சாம்பியனான மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோதி வருகின்றன. அப்போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை 537 ரன்கள் குவித்து மிரட்டியது.
அதிகபட்சமாக சர்பராஸ் கான் 25 பவுண்டரி 4 சிக்சருடன் இரட்டை சதமடித்து 222* ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் ரகானே 97, ஸ்ரேயாஸ் ஐயர் 57, டானுஷ் கோட்டியான் 64 ரன்கள் எடுத்தனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அசத்தும் ஈஸ்வரன்:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 9 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரனுடன் தமிழக வீரர் சாய் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதனால் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 32 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
அடுத்து வந்த தேவ்தூத் படிக்கல் 16, இஷான் கிசான் 38 ரன்களில் அவுட்டாகி சென்றனர். மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன் அரை சதமடித்து சவாலை கொடுத்தார். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அவர் சதமடித்தார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் 3வது நாள் முடிவில் 289-4 ரன்கள் குவித்துள்ள ரெஸ்ட் ஆஃப் இந்தியா இன்னும் 248 ரன்கள் பின்தங்கியுள்ளது.
வாய்ப்பு கிடைக்குமா:
களத்தில் அபிமன்யு ஈஸ்வரன் 151*, துருவ் ஜுரேல் 30* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக பெங்காலை சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன் கடந்த 2013 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் இதுவரை 79 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19 சதங்கள் 23 அரை சதங்கள் உட்பட 5746 ரன்களை 46.33 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ளார். அதன் காரணமாக கடந்த காலங்களில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடந்த தொடர்களில் அவர் இந்திய அணிக்காக தேர்வானார்.
இதையும் படிங்க: வெ.இ வாரியத்தின் அலட்சியத்தால்.. முரளிதரனின் உலக சாதனையை உடைக்கும் வாய்ப்பை தவற விட்ட அஸ்வின்
ஆனால் இதுவரை அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த சூழ்நிலையில் 2024 துலீப் கோப்பையில் 309 ரன்கள் அடித்த அவர் தற்போது இராணி கோப்பையில் சதமடித்து தாமும் இந்தியன் தான் என்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு காண்பித்துள்ளார். எனவே சர்பராஸ் கான் போல் போராடி வரும் அவருக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.



