ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அந்தத் தொடரில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பது இப்போதே காணப்படுகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சரித்திரம் படைத்தது.
எனவே இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள ரசிகர்களிடம் காணப்படுகிறது. மறுபுறம் கடந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய முன்னாள் வீரர்கள் சமீபத்தில் கணிப்பு வெளியிட்டு இருந்தனர்.
யுவ்ராஜ் கணிப்பு:
இந்நிலையில் 2020 – 21 தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்ததாக யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார். அப்போது 4 – 0 என்ற கணக்கில் இந்தியா தோற்கும் என்று மைக்கேல் கிளார்க், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்தது போல் தாமும் நினைத்ததாக யுவராஜ் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்து இந்தியா அபார வெற்றி பெற்றதாக யுவ்ராஜ் கூறியுள்ளார்.
அதனால் முன்பை விட தற்போது மனதளவில் அதிக தைரியமும் அனுபவமும் கொண்டுள்ள இந்திய அணி இம்முறையும் ஆஸ்திரேலியாவில் வெல்லும் என்று யுவராஜ் கணித்துள்ளார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா 36க்கு ஆல் அவுட்டானது. ஆனால் அங்கிருந்து இந்தியா 2 – 1 என்ற கணக்கில் வென்றது”
இந்தியா வெல்லும்:
“முதல் போட்டியில் அப்படியொரு தோல்வியை சந்தித்த பின் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் என்று நான் நினைத்ததில்லை. தற்போதைய தலைமுறையினர் எதிரணியை பற்றி சிந்திப்பதில்லை. தற்போதுள்ள இளம் வீரர்கள் கடந்த ஆஸ்திரேலிய தொடரை விட இம்முறை நன்றாக தயாராகி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2 முறை தோற்கடிப்பது மிகப்பெரிய விஷயம்”
இதையும் படிங்க: எங்களை மாதிரியே விளையாடும் அவர் ஆஸ்திரேலியராக இருக்க விரும்புகிறோம்.. ஹெட், மார்ஷ் பேட்டி
“அதற்கு முன் வரலாற்றில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் வென்றதில்லை. இம்முறையும் அங்கே வெல்வதற்கு இந்திய அணியினர் தயாராக இருப்பார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன். ஆனால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல. அது உலகக் கோப்பை வெல்வதை போன்றது. ஆனால் அது அசாத்தியம் கிடையாது. நன்றாக தயாராகி ஒருவருக்கொருவர் சேர்ந்து விளையாடினால் 3 – 2 (5) என்ற கணக்கில் வெல்ல முடியும்” என்று கூறினார்.



