சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 2007 டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் ப்ராட்க்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தது மறக்க முடியாத தருணமாக அமைந்தது. அப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் தேவையின்றி யுவராஜ் சிங்கை வம்பிழுத்தார். அதற்கு பலி கிடாவாக ஸ்டூவர்ட் ப்ராடை அடித்து நொறுக்கிய யுவராஜ் 6 சிக்ஸர்களை பறக்க விட்டு உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில் 2007ஆம் ஆண்டு ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் தம்மை 50வது ஓவரை வீசச் சொன்னதாக யுவ்ராஜ் கூறியுள்ளார். அதில் இங்கிலாந்து வீரர் டிமிரிட்டி மஸ்கேர்னெஸ் 5 சிக்ஸர்களை அடித்தார். அதற்கு பதிலடியாக 2007 டி20 உலகக் கோப்பையில் 6 சிக்ஸர்கள் அடித்து அவருக்கு சிரிப்பால் பதிலடி கொடுத்ததாக யுவராஜ் கூறியுள்ளார்.
6 சிக்ஸர்கள் பின்னணி:
இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் பக்கத்தில் யுவராஜ் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியில் ஃபிளின்டாப் 2 நல்ல பந்துகளை வீசினார். அதில் ஒரு பந்தை பவுண்டரி அடித்தால் என்னால் மற்றொரு யார்க்கர் பந்தை பாயிண்ட் திசைக்கு மேல் அடிக்க முடிந்தது. கடைசி பந்தில் சிங்கிள் எடுத்த என்னிடம் அவர் “இதெல்லாம் மோசமான ஷாட்ஸ்” என்று சொன்னார். அதற்கு நான் மன்னிக்கவும் என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தேன்”
“ஆனால் அவர் மீண்டும் அதை என்னுடைய முகத்துக்கு நேராக சொன்னார். அப்போது அவரிடம் சென்ற நான் “என்னுடைய கையில் இருக்கும் இந்த பேட் எங்கே செல்லும் தெரியுமா” என்று சொன்னேன். அங்கே நிலைமை மோசமானதால் நடுவர் உள்ளே வந்தார். உண்மையில் ப்ராடுக்கு எதிராக அடித்த 6 சிக்சர்களை விட ஃபிளின்டாப்புக்கு எதிராக அடித்த ஒரு சிக்சரை நான் ரசித்தேன்”
6 சிக்ஸர்களால் பதிலடி:
“ஓவல் ஒருநாள் போட்டியில் எங்களுடைய அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் பந்து வீசி முடித்திருந்தனர். அதனால் ராகுல் டிராவிட் என்னை கடைசி ஓவரை வீசச் சொன்னார். அதில் டிமிரிட்டி மஸ்கேர்னெஸ் 5 சிக்ஸர்கள் அடித்தது நினைவிருக்கிறது. டி20 உலகக் கோப்பையில் அடித்த 6 சிக்ஸர்களில் 5வது சிக்ஸரை அடித்த பின் டீப் மிட் டிக்கெட் திசையில் இருந்த மஸ்கேர்னெஸை பார்த்து சிரித்தேன்”
இதையும் படிங்க: சுப்மன் கில் கிடையாது.. ரோஹித்துக்கு பின் இவர் தான் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக தகுதியானவர்.. டேனிஷ் கனேரியா
“அதற்கு இது சமமாகும். 6வது சிக்ஸர் என்னுடையது என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தேன்” எனக் கூறினார். அத்துடன் ஃபிளின்டாப் வம்பிழுத்ததால் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று நினைத்தது கடைசியில் நடந்ததாகவும் யுவராஜ் கூறியுள்ளார். மேலும் 4வது பந்தை ப்ராட் நன்றாக வீசியும் பவுண்டரி எல்லை சிறிதாக இருந்ததால் சிக்ஸர் சென்றதாக கூறிய யுவராஜ் கடைசி பந்தில் வேறு வழியின்றி யார்க்கர் வீசுவார் என்று எதிர்பார்த்து சிக்சர் அடித்ததாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



