இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் ஒரு வழியாக 10 வருடங்கள் கழித்து ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் வென்றிருந்த இந்தியா அதன் பின் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அந்தத் தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்தியது.
அந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக ஐசிசி தொடர்களில் வெற்றி பெற சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை ரோஹித் சர்மா பின்பற்றுகிறார். அந்த அணுகுமுறையை பின்பற்றி அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது.
ஜான்டி ரோட்ஸ் பாராட்டு:
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்து விளையாட எப்போதுமே உங்களுடைய ஆட்டத்தை புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். அதை செய்யாததால் தம்முடைய கேரியரில் 2 வருடங்கள் தென்னாபிரிக்க அணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் ரோஹித் அந்த தவறை செய்யவில்லை என்று பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“கேப்டன்ஷிப் அடிப்படையில் அவர் சூப்பராக செயல்படுகிறார். அவருடன் ஐபிஎல் மும்பை அணியில் சில வருடங்கள் நான் வேலை செய்தேன். அங்கிருந்து அவர் சிறந்த கேப்டனாக வளர்ந்துள்ளது அவரைப் பற்றிய சிறந்த விஷயமாகும். கிரிக்கெட்டர்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதைச் செய்தால் உங்களால் சர்வதேச கிரிக்கெட்டில் எளிதாக விளையாட முடியும்”
ரோஹித் சர்மாவின் அணுகுமுறை:
“நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 2 வருடங்கள் நீக்கப்பட்டேன். ஏனெனில் என்னிடம் டெக்னிக்கல் பிரச்சினை இருந்தது. ஆனால் ரோஹித் சர்மாவை நீங்கள் பார்க்கும் போது நிறைய கிரிக்கெட்டை விளையாடி முன்னேற்றங்களை சந்தித்துள்ளார். எனவே நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்ளவில்லை என்றால் சிக்கிக் கொள்வீர்கள்”
இதையும் படிங்க: இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் வந்த வேகத்துலேயே காணாமல் போக இதுதான் காரணம் – பராஸ் மாம்ரே கருத்து
“ரோஹித் சர்மா விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற உள்ளார். அதற்காக அவருடைய கேரியர் முடிந்ததாக அர்த்தமில்லை. அவரைப் போன்றவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடலாம். ஃபார்ம் அடிப்படையில் அவர் சில வருடங்கள் விளையாடுவார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை இந்தியாவுக்காக வெல்வதே தம்முடைய இலக்கு என்று ரோஹித் சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



