இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் வந்த வேகத்துலேயே காணாமல் போக இதுதான் காரணம் – பராஸ் மாம்ரே கருத்து

Umran-Malik
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் கடந்த 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி இருந்தாலும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதால் உடனடியாக அதே ஆண்டு அவருக்கு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் 8 டி20 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உம்ரான் மாலிக் ஒரு உதாரணம் :

இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அவர் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேலாகவும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேலாகவும் வழங்கியதால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த ஓராண்டாகவே இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வரும் அவர் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் என்ற சாதனையை இலங்கை அணிக்கு எதிராக நிகழ்த்திய உம்ரான் மாலிக் மிகப்பெரிய வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் என்னதான் வேகமாக பந்து வீசினாலும் ரன்களை வாரி வழங்குவதால் அவரை மீண்டும் தேர்வுக்குழுவினர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் உம்ரான் மாலிக் இந்திய அணிக்காக அறிமுகமான அதே வேகத்தில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட என்ன காரணம் என்பது குறித்து முன்னாள் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ரே சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : உம்ரான் மாலிக் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும்போது அவரது ஐபிஎல் செயல்பாட்டை வைத்து மட்டுமே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இன்னும் பயிற்சி வேண்டும் என்பதை உணர்ந்த பிசிசிஐ உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு அவரை கேட்டுக்கொண்டது.

- Advertisement -

டி20 போட்டிகள் என்பது 24 பந்துகள் மட்டுமே ஒரு பவுலர் வீசக்கூடிய ஃபார்மேட். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இருந்தால் தான் பவுலர்களால் ரன்களை வாரி வழங்காமல் நேர்த்தியாக பந்துவீச முடியும் என்பதை உணர்ந்த நிர்வாகம் அவரை தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதிகமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உம்ரன் மாலிக் உதாரணமாக இருக்கிறார்.

இதையும் படிங்க : என் அப்பாவுக்கு அந்த பிரச்சனை இருப்பது உண்மைதான்.. ஓஹ் அதனால தான் இப்படியெல்லாம் பேசுறாரா?

நிச்சயம் அவர் உள்ளூர் போட்டிகளில் அதிகமாக விளையாடி அனுபவத்தை பெற்றால் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியும் என்று பராஸ் மாம்ரே கூறியுள்ளார். தற்போதைக்கு உள்ளூர் தொடரில் உம்ரான் விளையாடி வந்தாலும் அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Advertisement