வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 (2) என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.
அந்த நிலையில் அத்தொடரின் 3வது போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ரீஷா ஹென்றிஸ் திணறலாக விளையாடி 9 (20) ரன்களில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை கொடுத்தார்.
தடுத்த மழை:
இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் ஐடன் மார்க்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த போது 20 (12) ரன்களில் அவுட்டாக்கிய ரொமாரியா செபாஃர்ட் மறுபுறம் திணறிக் கொண்டிருந்த மற்றொரு துவக்க வீரர் ரிக்கல்டனையும் 27 (24) ரன்களில் காலி செய்தார். ஆனால் 4வது இடத்தில் களமிறங்கி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை பிரித்து மேய்ந்த ட்ரிஷன் ஸ்டப்ஸ் 5 பவுண்டரி 3 சிக்ஸர்களை விளாசி 40 (15) குவித்து அவுட்டானார்.
அதன் பின் ஜே ஸ்மித் 6*, முல்தார் 1* ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது மழை வந்து போட்டியை நிறுத்தியது. அப்படியே தொடர்ந்து பெய்த மழை சில மணி நேரங்கள் கழித்து ஓய்ந்தது. அப்போது 13 ஓவரில் 108-4 ரன்களுடன் தென்னாப்பிரிக்காவின் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ரொமாரியா செபாஃர்ட் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஒய்ட்வாஷ் வெற்றி:
அதைத்தொடர்ந்து 13 ஓவரில் 114 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதனேஷ் 1 ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் அதிரடியாக 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 35 (13) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் தென்னாப்பிரிக்கா பவுலர்களை தெறிக்கவிட்ட மற்றொரு துவக்க வீரர் சாய் ஹோப் 1 பவுண்டரி 4 சிக்சருடன் 42* (24) ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க: அந்த 2 விஷயங்களை முன்னேற்றுவதே என்னோட முதல் இலக்கு.. புதிய ஐசிசி தலைவர் ஜெய் ஷா பேட்டி
இறுதியில் சிம்ரோன் ஹெட்மயர் தம்முடைய பங்கிற்கு 4 பவுண்டரி 1 சிக்சருடன் 31* (17) ரன்கள் குவித்ததால் 9.2 ஓவரிலேயே 116-2 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக 56 பந்திலேயே 116 ரன்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் 7 பவுண்டரி 9 சிக்சர்களை பறக்க விட்டு தென்னாபிரிக்காவை துவம்சம் செய்தனர். அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்து இத்தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு தென்னாப்பிரிக்காவை பழி தீர்த்து பதிலடி கொடுத்து டி20 கிரிக்கெட்டில் எப்போதும் தங்களை கில்லி என்பதை நிரூபித்து கோப்பையை வென்றது.



