இந்தியாவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து இலங்கை கிரிக்கெட் அணி வென்றது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்கும் அந்த தொடரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து இலங்கை வெல்வது கடினமானதாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே இங்கிலாந்து டி20 போல அதிரடியாக விளையாடுகிறது. பஸ்பால் எனப்படும் அந்த அணுகுமுறையை பின்பற்றி சொந்த மண்ணில் இதுவரை இங்கிலாந்து தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே வெளிநாடுகளில் தடுமாறினாலும் இங்கிலாந்து சொந்த மண்ணில் இலங்கை அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ்பால் விளம்பரம்:
இந்நிலையில் பஸ்பால் என்பது வெறும் விளம்பரம் என இலங்கை அணியின் பயிற்சியாளர் சனாத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். மேலும் ஆடம் கில்கிறிஸ்ட், ஹைடன் போன்ற தங்கள் காலத்தைச் சேர்ந்தவர்கள் 90களிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடியதாக அவர் கூறியுள்ளார். எனவே இத்தொடரில் இங்கிலாந்தை வீழ்த்த இலங்கைக்கு அவர் கொடுத்த சில ஆலோசனைகள் பின்வருமாறு.
“சூழ்நிலையை பொறுத்து உங்களிடம் பல்வேறு ஸ்டைல் இருக்கும். ஆடம் கில்கிறிஸ்ட், மேத்தியூ ஹைடன் அதை எங்களது காலத்தில் செய்தனர். இது போல கடந்த காலங்களில் நாங்கள் விளையாடினோம். ஆனால் தற்போது இது புதிதாக இருப்பதாக ஊடகங்களில் வெறும் விளம்பரம் காணப்படுகிறது. இங்கிலாந்து ஆரம்பத்தில் இருந்தே அட்டாக் செய்யும் கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறது”
“ஆனால் கடைசியில் 300 – 400 ரன்களை தொடுவதே இலக்காகும். எனவே நமது அணியில் பசி இருக்க வேண்டும் என்பதை நான் உறுதி செய்து கொள்ள விரும்புகிறேன். இந்த 3 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு உங்களுக்கு எளிதாக கிடைக்காது. எனவே நாம் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இங்கிலாந்தில் ரன்கள் அடிப்பது சவாலாகும். ஏனெனில் பிட்ச் ஃபிளாட்டாக இருந்தாலும் பந்து வேகம் மற்றும் ஸ்விங் ஆகும்”
இதையும் படிங்க: 2025 வரை வாய்ப்பில்லை.. இதெல்லாம் போதாது இஷான் கிசான் கம்பேக் கொடுக்க இதை செய்யணும்.. பசித் அலி
“எனவே அதற்கு நாம் அட்ஜஸ்ட் செய்து போராட வேண்டும். உங்களிடம் 6 – 7 பேட்ஸ்மேன்கள் இருந்தால் கண்டிப்பாக 2 – 3 பேர் அசத்துவார்கள். அவர்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தால் அதை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். அனைவரும் தங்களுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாட வேண்டும். இங்கே பந்து பழையதானால் கூட வேகம் இருக்கும். அது தான் டுக் பந்துகளின் தனித்துவமாகும்” என்று கூறினார்.



