ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இசான் கிசான் மீண்டும் இந்திய அணியில் இழந்த இடத்தை பிடிப்பதற்காக போராடி வருகிறார். கடைசியாக தென்னாப்பிரிக்க மண்ணில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவர் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகியிருந்தார். ஆனால் அப்போது பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக பிசிசிஐயிடம் ஸ்பெஷல் அனுமதி கேட்ட அவர் பாதியிலேயே வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேஎஸ் பரத்துக்கு பதிலாக தேர்ந்தெடுக்க ரஞ்சிக்கோப்பையில் விளையாடி தயாராக இருக்குமாறு இஷான் கிஷானிடம் அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டார். ஆனால் அதைக் கேட்காத இஷான் கிசான் ஐபிஎல் தொடரில் விளையாட தயாரானார். அதனால் கோபமடைந்த பிசிசிஐ அவரை இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து நீக்கியது.
கம்பேக் வாய்ப்பு:
போதாக்குறைக்கு ஐபிஎல் 2024 தொடரில் மும்பை அணியில் இசான் கிசான் மிகவும் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் சமீபத்திய ஜிம்பாப்வே மற்றும் இலங்கை தொடர்களிலும் அவரை பிசிசிஐ கழற்றி விட்டது. அதனால் வேறு வழியில்லாத அவர் தற்போது பிசிசிஐ சொன்னது போல தமிழ்நாட்டில் நடைபெறும் புஜ்ஜி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார்.
அதில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் கேப்டனாக விளையாடி சதமடித்த அவர் ஜார்க்கண்டை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 92 ரன்களில் இருந்த போது அடுத்தடுத்த சிக்ஸர்களுடன் சதத்தை தொட்ட அவர் 2வது இன்னிங்சில் அடுத்தடுத்த சிக்ஸர்களை அடித்து ஃபினிஷிங் செய்தார். அந்த வகையில் தமிழ்நாட்டு மண்ணில் கம்பேக் கொடுத்துள்ள அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட தயாராக உள்ளேன் என்பதை பிசிசிஐக்கு காண்பித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ரிஷப் பண்ட் வந்துள்ளதால் இந்திய அணியில் இஷான் கிசான் கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார். எனவே 2025 ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி பெரிய ரன்கள் குவித்தால் மட்டுமே மீண்டும் கம்பேக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பசித் அலி பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே நான் தான் சிறந்த ஸ்பின்னர்.. அந்த வாய்ப்பை கொடுங்க.. அகர்கருக்கு சாய் கிசோர் கோரிக்கை
“இஷான் கிசான் தற்போது ஐபிஎல் தொடரில் அசத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரை அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பே இல்லை. சொல்லப்போனால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வரையிலும் அவருக்கு வாய்ப்பு இல்லை. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்” என்று கூறினார்.



