இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதும் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ஜடேஜா ஆகியோருக்கு சமீபத்திய இலங்கை தொடரில் அவர் வாய்ப்பு கொடுக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதே போல சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் அவருக்கு அடுத்ததாக நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் இலங்கை தொடர்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே போல அடுத்ததாக நடைபெறும் உள்ளூர் துலீப் கோப்பையில் கூட அவரை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு கழற்றி விட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ள சஹால் அங்கே நடைபெறும் ஒன்டே கோப்பை 50 ஓவர் தொடரில் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாடத் தொடங்கியுள்ளார்.
இங்கிலாந்தில் அசத்தல்:
அதில் ஆகஸ்ட் 14ஆம் தேதியான நேற்று அவர் தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். கேன்டர்பேரி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கென்ட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி நார்த்தம்டன்ஷைர் பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ஜெய்டன் டென்லி 22 ரன்கள் எடுத்தார. நார்த்தம்டன்ஷைர் சார்பில் அதிகபட்சமாக இந்திய வீரர் சஹால் 10 ஓவரில் 5 மெய்டன் ஓவர்களை வீசி வெறும் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதையும் சேர்த்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சஹால் 6வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து 83 ரன்களை துரத்திய நார்த்தம்டன்ஷைர் அணிக்கு பிரிதிவி ஷா 17, ஜேம்ஸ் சேல்ஸ் 33*, ஜார்ஜ் பார்லெட் 31* ரன்கள் எடுத்தனர்.
அதன் காரணமாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நார்த்தம்டன்ஷைர் அணிக்காக தன்னுடைய அறிமுக போட்டியிலேயே சஹால் 6 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் தாம் சோடை போகவில்லை என்பதை காண்பித்த அவர் அகர்கர், கம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சஹால் அந்த தொடரில் இன்னும் 5 போட்டிகளில் விளையாட உள்ளார்.
இதையும் படிங்க: வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் – பி.சி.சி.ஐ தகவல்
அதிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுக்க அவர் போராட உள்ளார். குறிப்பாக அடுத்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் சஹால் கம்பேக் கொடுக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



