பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாகவே கத்துக்குட்டிகளிடம் தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்ற அந்த அணி 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக 2011 உலகக்கோப்பை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய கேரி கிரிஸ்டனை பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய வெள்ளைப்பந்து அணியின் பயிற்சியாளராக நியமித்தது.
ஆனால் அவருடைய தலைமையிலும் 2024 டி20 உலகக் கோப்பையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் கத்துக்குட்டி அமெரிக்காவிடம் தோற்றது. அத்துடன் இந்தியாவிடம் 120 ரன்களை அடிக்க முடியாமல் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அப்போது பாகிஸ்தான் அணியில் வீரர்களிடம் ஒற்றுமையில்லை என்று தெரிவித்த கேரி க்ரிஸ்டன் இது போன்ற அணியை தாம் பார்த்ததில்லை என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பாண்டிங் அட்வைஸ்:
இந்த சூழ்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரிலிருந்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பி பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஜேசன் கில்லஸ்பி இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் போல அதிகம் பேசாமல் வித்தியாசமான வழியில் செயல்படுவார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
எனவே கம்பீர் போலவே கில்லெஸ்பியும் சில மாற்றங்களை செய்வார் என்பதால் அதற்கு பாகிஸ்தான் வீரர்கள் ஒத்துழைப்பு கொடுத்து விளையாடுமாறு பாண்டிங் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜேசன் கில்லஸ்பி கொஞ்சம் கெளதம் கம்பீர் போன்றவர். இதுவரை பயிற்சியாளராக செயல்பட்ட இடங்களில் அவருடைய சாதனைகள் நன்றாக உள்ளது”
“பாகிஸ்தான் அணியில் அவருக்கு சில சவால்கள் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அவர் மிகவும் ஆழமாக சிந்திக்கக் கூடியவர். இருப்பினும் ஏற்கனவே சொன்னது போல் மிகவும் அமைதியாக இருக்கக் கூடிய நபரான அவர் தன்னுடைய வழியில் செயல்படுவார். அவரைப் போன்ற எங்கள் காலத்தில் விளையாடிய வீரர்களுடன் நாங்கள் சில வருடங்களாக வாட்ஸ்அப் குருப்பில் இருக்கிறோம்”
இதையும் படிங்க: ஹாட்ரிக் கனவு காணாதீங்க.. இந்த 2 காரணத்தால் இம்முறை இந்தியாவை 3 – 1ன்னு ஆஸி தோற்கடிக்கும்.. பாண்டிங் கணிப்பு
“அதனால் பயிற்சியாளர் வேலையில் சிறப்பாக செயல்படுவதற்கு கில்லெஸ்பியை அனைவரும் வாழ்த்தினோம். பாகிஸ்தான் அணியில் அவருக்கு இருக்கும் சவால்களால் எனக்கு ஆச்சரியமில்லை. டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமான ஃபார்மட் என்றாலும் 2024 டி20 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்வியால் பாகிஸ்தான் ஏமாற்றத்துடன் இருப்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை எனில் அதே பழைய தோல்விகள் தான் உங்களுடைய வழியில் வரும்” என்று கூறினார்.



