இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. காலம் காலமாக தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா விராட் கோலி தலைமையில் 2018/19 கோப்பையை வென்று ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்தது.
அதற்கு 2020/21 தொடரின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்தது. ஆனால் அங்கிருந்து ரகானே தலைமையில் இளம் வீரர்களுடன் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த தொடர்களை வென்ற முதல் அணியாகவும் இந்தியா வரலாறு படைத்தது.
பாண்டிங் கணிப்பு:
அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் இயற்கையாகவே போராடக்கூடிய குணத்தை கொண்ட ஆஸ்திரேலியர்கள் கடந்த 2 தோல்விக்கு இம்முறை இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுப்பார்கள் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
மேலும் இம்முறை 5 போட்டிகள் நடைபெறுவது ஆஸ்திரேலியாவுக்கு சாதகம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே 3 – 1 என்ற கணக்கில் இந்தியாவை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று கணிக்கும் பாண்டிங் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் போட்டி மிகுந்த தொடராக இருக்கும். கடந்த 2 தொடர்களில் இங்கு நடந்துவற்றின் பின்னணியில் இம்முறை இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய தங்களை நிரூபிக்க வேண்டிய புள்ளி கிடைத்துள்ளது”
“இம்முறை 5 நடைபெறுவது தான் அத்தொடரில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். கடந்த முறை 4 போட்டிகள் கொண்ட தொடர்கள் தான் நடந்தது. எனவே இம்முறை 5 போட்டிகளுக்கு அனைவரும் காத்திருக்கிறோம். இம்முறை அதிக டிரா போட்டிகள் இருக்குமா என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் எப்போதும் கணிக்க மாட்டேன். இம்முறை மழையால் ஒரு போட்டி பாதிக்கப்படலாம்”
இதையும் படிங்க: இது தான் உண்மையான் மதிப்பு.. பட் கமின்ஸ், ஸ்டார்க்கை ஈஸியா விராட் கோலி முந்திடுவாரு.. ஹுக் எட்மீட்ஸ்
“ஒரு போட்டி சமனில் முடிவடையலாம். எப்படியிருந்தாலும் 3 – 1 கணக்கில் அந்த தொடரை ஆஸ்திரேலியா வெல்லும்” என்று கூறினார். முன்னதாக 2020/21 தொடரில் 4 – 0 என்ற கணக்கில் இந்தியா தோற்கும் என மைக்கேல் கிளார்க், மைக்கேல் வாகன் போன்ற பல முன்னாள் வீரர்கள் கணித்தனர். ஆனால் அவற்றை பொய்யாக்கி வரலாறு படைத்ததை போல இம்முறையும் இந்தியா சாதிக்க போராட உள்ளது.



