இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.
அதில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் முதல் முறையாக விராட் கோலி விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஒரே மாநிலத்தில் பிறந்து ஒன்றாக நாட்டுக்காக விளையாடிய அவர்கள் 2013 ஐபிஎல் தொடரில் சண்டை போட்டுக் கொண்டார்கள். அத்துடன் 10 வருடங்கள் கழித்து 2023 ஐபிஎல் சீசனில் கௌதம் கம்பீர் ஆலோசகராக விராட் கோலியுடன் வாக்குவாதம் செய்தார்.
வாயை மூடிட்டு இருப்பாங்க:
இருப்பினும் 2024 ஐபிஎல் தொடரில் தாமாக சென்று விராட் கோலியிடம் பேசிய கௌதம் கம்பீர் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அத்துடன் பயிற்சியாளராக பொறுப்பேற்றதும் விராட் கோலிக்கு மெசேஜ் செய்ததாகவும் கம்பீர் தெரிவித்தார். எனவே நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று சமீபத்தில் கௌதம் கம்பீர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கௌதம் கம்பீர் – விராட் கோலி மேற்கொண்டு சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டுமென முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார். அதே சமயம் பழையவற்றை மறந்து இந்தியாவுக்காக இருவரும் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு விளையாடுவார்கள் என்றும் ஸ்டைரிஸ் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“அதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனெனில் நாம் இங்கே அமர்ந்து கொண்டு அது வேலை செய்யும், இது நடக்கும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் அந்த இருவரும் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு ஒன்றாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக விராட் கோலியை பொறுத்த வரை கௌதம் கம்பீர் எப்படி அணியை வழி நடத்துகிறார் என்பதை பார்ப்பார். மறுபுறம் விராட் கோலியின் தலைமைப் பண்புகளை பயன்படுத்தி இளம் வீரர்களுக்கு உதவ கௌதம் கம்பீர் பார்ப்பார்”
“எனவே அவர்களுடைய உறவு எப்படி இருக்கும், எப்படி ஒன்றாக அணியை வழி நடத்துவார்கள் என்பது நமக்குத் தெரியாது. இருப்பினும் அவர்கள் இருவருமே அற்புதமான கிரிகெட்டர்கள். கிரிக்கெட்டை பற்றிய நல்ல மூளையை கொண்டவர்கள். எனவே அணிக்கு நன்மையை செய்யக்கூடிய வேலையை செய்வதற்கு அவர்கள் போதுமான புத்திசாலித்தனத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.



