அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது வளர்ந்து வரும் அணிகளை சேர்ந்த ஒரு சில வீரர்களின் சிறப்பான செயல்பாடு உலக அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த வகையில் அமெரிக்க அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளி வீரரான சவுரப் நேத்ரவால்கர் மிகச் சிறப்பான பந்துவீச்சை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த எம்.எல்.சி கிரிக்கெட் தொடரிலும் 15 விக்கெட் வீழ்த்தி அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருந்தார். வாஷிங்டன் அணிக்காக விளையாடிய அவர் அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.
அந்த அளவிற்கு தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் எதிரணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருந்தார். அதேபோன்று டி20 உலக கோப்பிலும் 6 ஆட்டங்களில் விளையாடி இருந்த அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் ஒரு ஓவருக்கு 6.63 என்கிற சதவீதத்தில் மிகக் குறைவான ரன்களை வழங்கி இருந்தார்.
இப்படி டி20 உலக கோப்பை மற்றும் எம்.எல்.சி என அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு கவனத்தை ஈர்த்துள்ள அவர் விரைவில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மும்பையில் பிறந்த அவர் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.
அதன்பின்னர் தேசிய அணிக்காக வாய்ப்பு கிடைக்காமல் போக அமெரிக்கா சென்று சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து கொண்டே கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அமெரிக்க அணிக்காக இடம் பிடித்திருந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு அமெரிக்க அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 48 ஒருநாள் போட்டிகளிலும் 33 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எவ்வளவோ பேசியும் முடியல.. டெல்லி அணியில் அவரை என்னால பெரியாளா உருவாக்க முடியல.. பாண்டிங் வருத்தம்
அதே போன்று பந்துவீச்சில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அவருக்கு ஐபிஎல் தொடரில் நிச்சயம் அவரை வாங்க சில அணிகள் போட்டி போடலாம் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



