இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரரான வீரேந்திர சேவாக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக கடந்த 1999-ஆம் ஆண்டு அறிமுகமாகி 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 104 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பல பந்துவீச்சாளர்களை அச்சுறுத்திய ஒரு அபாயகரமான துவக்க வீரர் இவர் என்றால் அது மிகையல்ல.
அந்த அளவிற்கு பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்தி விளையாடிய அவர் குறிப்பாக முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்கும் திறனும், டெஸ்ட் போட்டிகளில் சிக்ஸர் அடித்து சதங்களை பூர்த்தி செய்தல் என சேவாக்கின் அதிரடியான பேட்டிங்கிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்று கூறலாம். இந்நிலையில் சேவாக்குடன் இணைந்து விளையாடிய ஒரு இன்னிங்ஸ் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதுகுறித்து அவர் கூறியதாவது : லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது இங்கிலாந்து அணி எங்களுக்கு 320 ரன்களை இலக்காக வைத்திருந்தது. அப்போது நான் பேட்டிங் செய்ய கீழ இறங்கி வந்தேன். எனக்கு பின்னால் வந்த சேவாக் விசில் அடித்தார். நான் அப்போது அவரிடம் கடுமையாக திட்டி 320 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியுள்ளது. உனக்கு இந்த நேரத்தில் ஜோக்காக இருக்கிறதா? என்று கேட்டேன்.
அதற்கு சேவாக் என்னிடம் : கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். பின்னர் நாங்கள் 74 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்திருந்தோம். அப்போது ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச தயாரானார். நான் சேவாக்கிடம் சென்று விக்கெட் விடாமல் பொறுமையாக ஆடு நாம் வெற்றியை பெற்றுவிடலாம் என்று கூறினேன். அவரும் சரி சரி என்று கூறிவிட்டு முதல் பந்தை மிட் ஆப்புக்கு மேல் பவுண்டரி அடித்தார்.
அப்போது நான் ஒரு பவுண்டரி வந்து விட்டது. நான் சேவாக்கிடம் சென்று ஒரு பவுண்டரி வந்துவிட்டது இனி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தால் போதும் என்று கூறினேன். அதற்கு அவர் சரி சரி பிரச்சனை இல்லை என்று மீண்டும் சென்று இரண்டாவது பந்திலும் பவுண்டரி அடித்தார். அப்போதும் நான் அவரிடம் இரண்டு ஷாட்டுகளுமே நன்றாக இருந்தது. 8 ரன்கள் வந்துவிட்டது சிங்கில் எடுக்கலாம் என்று கூறினேன்.
இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஷிவம் துபேவுக்கு பதிலா பினிஷராக ஆடப்போறது அவர்தான் – விவரம் இதோ
அப்போதும் சரி சரி என்று கூறிய அவர் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார். பின்னர் நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை பிறகு நான்காவது பந்தை சிக்ஸராகவும், ஐந்தாவது பந்தை பவுண்டரியுமாக அடித்தார். பின்னர் கடைசி பந்தில் சிங்கில் அடித்து விட்டு என்னிடம் வந்து நான் சிங்கில் எடுத்து விட்டேன் என்று கூறினார். இப்படி தான் சேவாக் அவர் நினைத்தால் நினைத்தபடி தான் ஆடுவார் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.



