இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா தான் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையிலும் துணை கேப்டனாக செயல்பட்ட பாண்டியா இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
எனவே ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் நம்பினர். ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீரின் பரிந்துரையை ஏற்றுள்ள அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அத்துடன் ஹர்திக் பாண்டியாவின் துணை கேப்டன்ஷிப் பதவியையும் பறித்துள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை துணை கேப்டனாக அறிவித்துள்ளது.
திடீர் யூடர்ன்:
இந்நிலையில் திடீரென யூடர்ன் போட்டுள்ள தேர்வுக்குழு துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்ததால் ஹர்திக் பாண்டியா மனமுடைந்திருப்பார் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக நியமிக்கப்படாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”
“ஏனெனில் ஒருவேளை 2023 உலகக் கோபையில் காயத்தை சந்திக்காமல் போயிருந்தால் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித்துக்கு பதிலாக பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்பது போல் தெரிந்தது. இந்திய அணியும் தேர்வுக்குழுவும் அந்தக் கோணத்தில் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் திடீரென அவர்கள் இப்படி யூடர்ன் போட்டுள்ளது கொஞ்சம் பிரச்சனையை ஏற்படுத்துவதாக அமைகிறது”
“இது பற்றி ஹர்திக் பாண்டியாவிடம் தேர்வுக்குழுவினர் பேசி விட்டதாக செய்திகள் காணப்படுகின்றன. மறுபுறம் சூரியகுமார் உள்ளூர் கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் தேவையான அனுபவத்தை கொண்டுள்ளார். அவருக்கும் வீரர்களிடமிருந்து எப்படி சிறந்த செயல்பாடுகளை கொண்டு வருவது என்பது தெரியும். எனவே சூரியகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் தவறில்லை”
இதையும் படிங்க: இந்தியாவின் நம்பர் ஒன் பவுலர் பும்ரா கிடையாது.. இவ்ளோ செஞ்சும் நம்பிக்கை வரல.. ஷமி வித்யாச கருத்து
“அவரால் இந்த வேலையை செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஆனால் இந்த முடிவு பாண்டியாவுக்கு அநியாயத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு வீரராக தேர்வாளர்களும் புதிய பயிற்சியாளரும் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். தற்போது டி20 கேப்டன்ஷிப் விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு கண்டிப்பாக ஹர்திக் பாண்டியாவுக்கு அநீதியை ஏற்படுத்தியுள்ளது. அது அவருக்கு ஆழமாக காயப்படுத்தி இருக்கும்” என்று கூறினார்.



