71 ரன்ஸ்.. முரட்டு சிக்ஸரால் உடைந்த ஓடு.. தப்பிய ரசிகர்கள் டெயில் எண்டரிடம் திணறிய இங்கிலாந்து.. வெ.இ வெல்லுமா?

Shamar Joseph Six
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி ட்ரென்ட் பிரிட்ஜ் நகரில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஓலி போப் சதமடித்து 121, பென் டக்கெட் 71, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு லூயிஸ் 21, மெக்கன்சி 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

போராடும் வெஸ்ட் இண்டீஸ்:
அதே போல மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ப்ரத்வெய்ட் 48 ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த அலிக் அதனேஷ் மற்றும் காவெம் ஹோட்ஜ் ஆகியோர் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறினர். அந்த வகையில் நங்கூரத்தை போட்ட இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை தூக்கியது.

அதில் அதனேஷ் அரை சதமடித்து 82 ரன்களும் காவெம் ஹோட்ஜ் சதமடித்து 120 ரன்களும் விளாசி அவுட்டானார்கள். அடுத்ததாக வந்த ஜோஸ்வா டா சில்வா முன்னிலையை பெற்றுக் கொடுக்கப் போராடினார். ஆனால் எதிர்ப்புறம் ஜேசன் ஹோல்டர் 27, கெவின் சின்க்லைர் 4, அல்சரி ஜோசப் 10 ஜெய்டேன் சீல்ஸ் 0 ரன்களில் அவுட்டானதால் 386/9 என தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெறாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இருப்பினும் அப்போது 11வது பேட்ஸ்மேனாக வந்த சமர் ஜோசப் 107வது ஓவரில் கஸ் அட்கின்ஷன் வீசிய 4வது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை பறக்க விட்டார். அது ரசிகர்கள் அமரும் மைதானத்தின் மேற்கூரையில் இருந்த சில ஓடுகளை அடித்து நொறுக்கியது. அந்த துண்டுகள் கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் மீதும் விழுந்தது. நல்லவேளையாக ரசிகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

அந்த வகையில் அதிரடியாக விளையாடிய சமர் ஜோசப் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 33 (27) ரன்கள் விளாசி முன்னிலையை பெற்றுக் கொடுத்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய டா சில்வா 10வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 82* ரன்கள் அடித்ததார். இதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த 2வது வெஸ்ட் இண்டீஸ் ஜோடியாகவும் டா சில்வா – சமர் ஜோசப் சாதனை படைத்தனர்.

இதையும் படிங்க: பாவங்க ருதுராஜ்.. நடிகைகளுடன் கிசுகிசுவை பாக்குறாங்களே தவிர அந்த 7 மேட்ச்சை பாக்கல.. பத்ரிநாத் ஆதங்கம்

அதனால் வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 457 ரன்கள் குவித்து 41 ரன்கள் முன்னிலையும் பெற்று கம்பேக் கொடுத்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து விளையாடும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 248/3 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு பென் டக்கெட் 76, ஓலி போப் 52 ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் களத்தில் ஜோ ரூட் 37*, ஹரி ப்ரூக் 71* ரன்களுடன் உள்ளனர். தற்போதைய நிலையில் 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து மீண்டும் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது.

Advertisement