இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா 2003 – 2017 வரை நாட்டுக்காக கணிசமான போட்டிகளில் விளையாடினார். அத்துடன் ஐபிஎல் தொடரில் மூன்று முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரராக சாதனை படைத்துள்ள அவர் சமீபத்தில் விரிவான பேட்டி ஒன்றைக் கொடுத்தார். அதில் முதல் நாளில் பார்த்தது போலவே இப்போதும் ரோகித் சர்மா இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் அதிகாரம் மற்றும் புகழ் வந்த பின் மாறிவிட்ட விராட் கோலி தம்மிடம் அதிகம் பேசுவதில்லை என்று மிஸ்ரா தெரிவித்திருந்தார். அது போக எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் கேப்டனாக இந்திய அணியில் தமக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதே பேட்டியில் நவீன்-உல்-ஹக்கிடம் 2023 ஐபிஎல் தொடரில் விராட் கோலி வம்பிழுத்தது பற்றியும் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.
சச்சின், தோனியாக முடியாது:
அதில் ஜூனியர் வீரர்களிடம் அன்பும் மரியாதையும் காட்டாததால் தோனி மற்றும் சச்சினுக்கு நிகராக விராட் கோலி மரியாதையை பெறுவாரா என்பது சந்தேகம் என்று மிஸ்ரா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பெங்களூருவில் வென்ற பின் கௌதம் கம்பீர் தன்னுடைய ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார். அங்கே ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டதால் கம்பீர் அமைதியாக இருக்குமாறு சொன்னார்”
“அதை விராட் கோலி விரும்பவில்லை என்று நினைக்கிறேன். அது அங்கேயே முடிந்து விட்டதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் அதற்கு பதிலடியாக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் அவர் கெய்ல் மேயர்ஸ், நவீன்-உல்-ஹக் ஆகியோரை திட்டினார். அங்கே விராட் நிறைய விஷயங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் விராட் அதை செய்யவில்லை. ஏனெனில் பேட்டிங் செய்த போதும் நவீனிடம் அவர் பேசினார்”
“அப்போது உங்களுடைய மதிப்புக்கு இந்த இளம் வீரரிடம் இப்படி பேசலாமா? என்று விராட் கோலியிடம் நான் கேட்டேன். அதற்கு “நீங்கள் புரிந்து கொண்டதை அவருக்கு சொல்லுங்கள்” என்று விராட் என்னிடம் சொன்னார். ஆனால் அப்போட்டி முடிந்த பின்பு கை கொடுக்கும் நிகழ்வில் விராட் கோலி மீண்டும் நவீனை திட்டினார். அப்போது தான் போட்டி முடிந்த பின்பும் நீங்கள் வென்ற பின்பும் ஏன் வம்பிழுக்கிறீர்கள் என்று கம்பீர் குறுக்கிட்டார்”
“நான் அவர்களுக்குள் சென்று சண்டையை தடுத்தேன். ஆனால் அதன் பின்பும் விராட் கோலி தம்மை திட்டியதாக உடைமாற்றும் அறையில் நவீன் சொன்னார். மக்கள் இப்போதும் ஏன் சச்சின் அல்லது தோனியை மதிக்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் ஜூனியர்கள் மீது அன்பையும் மதிப்பையும் காட்டுகின்றனர்”
இதையும் படிங்க: எல்லாரும் சொல்ற மாதிரி விராட் கோலியிடம் பயந்துடக்கூடாது.. நான் வேணும்னே இதை செய்வேன்.. டிம் ஃபைன் ஓப்பன்டாக்
“ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பிரெட் லீ பீமர் பந்தால் சச்சினின் தோள்பட்டையில் தாக்கினார். அப்போது கோபமடைந்த சச்சின் எதுவுமே பேசாமல் பரவாயில்லை என்று சொன்னார். அப்போதிலிருந்து பிரட் லீ அவரை மதிக்கத் துவங்கி விட்டார்” என்று கூறினார்


