டிஎன்பிஎல் 2024 : வெறும் 1 ரன் த்ரில்லர்.. ஷாருக்கான் மேஜிக்.. கடைசி பந்தில் திருப்பூரின் வெற்றியை பறித்த கோவை

TNPL 5
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஜூலை ஏழாம் தேதி இரவு 7.30 மணிக்கு சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் 5வது போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற கோவை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கோவை அணிக்கு சுரேஷ்குமார் ஆரம்பத்திலேயே 6 ரன்னில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த பி சச்சின் 30 (24) ரன்களிலும் மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் சுஜய் 27 (24) ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் திருப்பூர் பவுலர்களை பந்தாடிய நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் சாருக்கான் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் அட்டகாசமாக விளையாடிய அவர் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 55 (32) ரன்கள் குவித்து நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

த்ரில் வெற்றி:
இறுதியில் முகிலேஷ் 13, அதீக் உர் ரஹ்மான் 11*, ராம் அரவிந்த் 13* ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் கோவை 160/7 ரன்கள் எடுத்தது. திருப்பூர் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 162 ரன்களை துரத்திய திருப்பூர் அணிக்கு முதல் பந்திலேயே ராதாகிருஷ்ணன் கோல்டன் டக் அவுட்டானார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் துஷார் ரஹீஜா நிதானமாக அதிரடியாகவும் விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் எதிர்ப்புறம் அமித் சாத்விக் 12, கேப்டன் விஜய் சங்கர் 16, பாலச்சந்தர் அனிருத் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாடிய முகமது அலி 35 (20) ரன்கள் குவித்ததால் 18 ஓவரில் திருப்பூர் 148/4 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியை வசமாக்கியது.

- Advertisement -

ஆனால் 19வது ஓவரில் மேஜிக் செய்த கேப்டன் ஷாருக்கான் முகமது அலியை அவுட்டாக்கி வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தத்தை உண்டாக்கினார். இருப்பினும் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது எதிர்ப்புறம் அரை சதமடித்து செட்டிலாகியிருந்த ரஹீஜா ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவர் வீசிய எம் முகமது முதல் 2 பந்துகளில் தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்த அவரை 3வது பந்தில் 81 (57) ரன்னில் அவுட்டாக்கினார்.

அதோடு நிற்காத முகமது அடுத்ததாக வந்த புவனேஸ்வரனை டக் அவுட்டாக்கியதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்ததாக வந்த அஜித் ராம் 5வது பந்தில் பவுண்டரி அடித்ததால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தை அடிக்கத் தவறிய அஜித் 2 ரன் எடுக்க ஓடிய போது ரன் அவுட்டானார். அதனால் திருப்பூரை 20 ஓவரில் 159/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய நடப்புச் சாம்பியன் கோவை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இந்தியா சாம்பியன்னு நிரூப்பிச்சுட்டாங்க.. அபிஷேக்கிடம் தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு இதான் காரணம்.. சிகந்தர் பேட்டி

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாருகான் மற்றும் முகமது தலா விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த கோவை புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. மறுபுறம் திருப்பூர் தங்களின் முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வியை சந்தித்தது.

Advertisement