ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 20ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு செயின்ட் லூசியா நகரில் 2வது சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. அதில் குரூப் 2 பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிரடியாக விளையாடிய ப்ரன்டன் கிங் 23 (18) ரன்களில் காயமடைந்து வெளியேறினார். ஆனால் மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 38 (34) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதே போல 3வது இடத்தில் நிக்கோலஸ் பூரான் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி 36 (32) ரன்களில் அவுட்டாகி சென்றார்.
மிரட்டல் வெற்றி:
அதைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஆண்ட்ரே ரசல் 1 (2) ரன்னில் அவுட்டாகி சென்ற போதிலும் கேப்டன் ரோவ்மன் போவல் 36 (17) ரன்கள் அதிரடியாக குவித்து அவுட்டானார். கடைசியில் ரூத்தர்போர்ட் 28* (15) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 180/4 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரசித், மொயின் அலி, லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
அதன் பின் 181 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு துவக்க வீரர் பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் எதிர்ப்புறம் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கேப்டன் ஜோஸ் பட்லர் 25 (22) ரன்களில் ராஸ்டன் சேஸ் சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த மொயின் அலி 13 (10) ரன்களில் ரசல் வேகத்தில் அவுட்டானார்.
ஆனால் அதற்கடுத்ததாக வந்த ஜானி பேர்ஸ்டோ தம்முடைய ஸ்டைலில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை புரட்டி எடுத்தார். அவருடன் இணைந்து மறுபுறம் தெறிக்க விட்ட பிலிப்ஸ் சால்ட் ரோமரியா ஃசெபார்ட் வீசிய 16வது ஓவரில் 4, 6, 4, 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்டு 30 ரன்கள் விளாசி வெற்றியை எளிதாக்கினார். அதே வேகத்தில் மிரட்டிய அவர் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 87* ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.
இதையும் படிங்க: 194 ரன்ஸ் சேசிங்கில் 76/5 என சரிந்தும் பயத்தை காட்டிய அமெரிக்கா.. ஒரே ஓவரில் வெற்றியை மாற்றிய ரபாடா
அவருடன் ஜானி பேர்ஸ்டோ 48* (26) ரன்கள் எடுத்ததால் 17.3 ஓவரிலேயே 181/2 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. அத்துடன் கடைசியாக விளையாடிய 8 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ச்சியாக வென்று வந்தது. ஆனால் அந்த வெற்றி நடையை இப்போட்டியில் அடித்து நொறுக்கி நிறுத்திய இங்கிலாந்து தங்களை நடப்புச் சாம்பியன் என்பதை நிரூபித்து முக்கிய நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளது.



