படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்த 7 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

Harbhajan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தி எதிரணி கொடுக்கும் சவால்களை சமாளித்து நாட்டுக்காக வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் கிரிக்கெட் வீரர்களை சினிமா பிரபலங்களுக்கு நிகராக ரசிகர்கள் கொண்டாட தயங்குவதே கிடையாது. மேலும் சினிமாவில் எப்போதும் பிரபலமானவர்கள் தோன்றினால் அந்தத் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது தாரக மந்திரமாகும். அந்த வகையில் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே மிகவும் புகழ் பெறும் கிரிக்கெட் வீரர்கள் அரிதாக ஏதேனும் திரைப் படங்கள் அல்லது தொலைக்காட்சி தொடர்களில் தோன்றி அந்த படத்திற்கு உறுதுணையாக அமைவார்கள். ஆனால் களத்தில் விளையாடுவதும் திரைப் படத்தில் நடிப்பதும் வெவ்வேறு கலை என்ற நிலைமையில் அனைவராலும் அதில் சிறப்பாக செயல்பட முடியாது.

ஆனாலும் திறமையான சில கிரிக்கெட் வீரர்கள் அனைத்து துறைகளிலும் சகலகலா வல்லவர்களை போல் தங்களிடம் தேடி வரும் சினிமா வாய்ப்புகளிலும் அசத்தலாக தோன்றி நடித்திருப்பார்கள். அந்த வகையில் திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. கபில் தேவ்: இந்தியாவில் இன்று கிரிக்கெட் இந்தளவுக்கு பிரபலமாக இருப்பதற்கு 1983இல் உலக கோப்பையை வென்று ஆழமான விதை போட்ட இவரை தெரியாத இந்திய ரசிகர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு மிகவும் பிரபலமான இவர் சல்மான் கான் நடித்த “முஜ்சே சாதி கரோகி” என்ற பாலிவுட் படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றினார்.

அதைவிட 20 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய தொலைக்காட்சி தொடரான “சிஐடி” தொடரிலும் 2003இல் சில எபிசோடுகளில் தோன்றிய இவர் சிறப்பாக நடித்திருந்தார்.

- Advertisement -

2. பிரட் லீ: வரலாற்றின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் 2009இல் “விக்டரி” எனும் பாலிவுட் திரைப்படத்தில் ரோகித் சர்மா, ஆசிஸ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் போன்ற இந்திய நட்சத்திரங்கள் கெஸ்ட் ரோலில் நடித்த போது அவர்களுடன் இணைந்து நடித்தார். அத்துடன் ஓய்வுக்குப் பின் கடந்த 2015இல் “அன்இந்தியன்” எனும் பாலிவுட் திரைப்படத்தில் ஆசிரியராகவும் இவர் நடித்திருந்தார்.

3. கிரண் மோர்: இந்தியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான இவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்எஸ் தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக உள்ளூர் கிரிக்கெட்டில் தோனி விளையாடிய போது அப்போதைய தேர்வுக்குழு தலைவராக இருந்த இவர் நேரடியாகவே அந்த ரோலில் இப்படத்தில் நடித்திருந்தார். அது போக 2016இல் தமன்னா என்ற தொலைக்காட்சித் தொடரிலும் இவர் கௌரவ வேடத்தில் தோன்றினார்.

4. மொஹிந்தர் அமர்நாத்: இந்தியாவில் இன்று ஆலமரமாய் கிரிக்கெட் வளர்ந்து நிற்க முக்கிய காரணமாக அமைந்த 1983 உலக கோப்பையில் கபில்தேவ் தலைமையிலான இந்தியா எப்படி சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்தது என்பதை விளக்கிய “83” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி கண்டது. அந்த திரைப்படத்தில் கபில் தேவ், ஸ்ரீகாந்த் உட்பட அனைத்து வீரர்களுக்கும் தனித்தனியே நடிகர்கள் நடித்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற இவர் இந்த படத்தில் தனது தந்தையான லாலா அமர்நாத் வேடத்தில் நடித்திருந்தார். அத்துடன் 2016இல் டிசூம் என்று திரைப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் இவர் நடித்திருந்தார்.

- Advertisement -

5. அனில் கும்ப்ளே: 2008இல் வெளியான “மிராபாய் நாட் அவுட்” எனும் திரைப்படத்தில் முதன்மை வேடமான மீரா இவருடைய தீவிர ரசிகையாக இருப்பார். அதனால் அந்தப் படக் குழுவினரின் கோரிக்கைக்கு ஏற்ப அந்த படத்தில் தன்னுடைய ரோலில் அனில் கும்ப்ளே தாமாகவே கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

6. ஹர்பஜன் சிங்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் 2018 வாக்கில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் தமிழக ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்றார். அதனால் சமீபத்தில் பிரண்ட்ஷிப் எனும் தமிழ் திரைப்படத்தில் முழுநேர கதாபாத்திரமாக நடித்திருந்த இவர் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்திலும் ஒரு வேடத்தில் நடித்திருந்தார்.

அதற்கு முன்பாகவே 2015இல் செகண்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட், 2013இல் பஜ்ஜி இன் பிராப்லம், 2004இல் முஜ்சே சாதி கரோகி போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

7. இர்பான் பதான்: இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் வீரரான இவர் சமீபத்தில் பிரபல தமிழ் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான “கோப்ரா” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

Advertisement