சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தான் தனித்துவமான மரியாதையும் உள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் 5 நாட்கள் நடைபெறும் அந்த வகையான கிரிக்கெட் தான் ஒரு வீரரின் திறமையும் தரத்தையும் பொறுமையும் சோதிக்கும் உண்மையான போட்டியாகும். அதற்கு தகுந்த செயல்பாடுகளை உள்ளூர் அளவில் வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடுவது ஒரு வீரருக்கு மிகவும் சவாலான காரியமாகும். அந்த வாய்ப்பில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வீரர்கள் கடைசி வரை ஒரே நாட்டுக்காக விளையாடி வெற்றிகளையும் சாதனைகளையும் படைப்பார்கள்.
ஆனால் சிலர் காலத்தின் கட்டாயத்தால் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் 2 வெவ்வேறு நாடுகளுக்கு விளையாடிய வரலாறும் உள்ளது. அது போன்ற வீரர்களை பற்றி பார்ப்போம்:
6. கேரி பேலன்ஸ்: ஜிம்பாப்வே நாட்டில் பிறந்த இவர் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2014இல் 23 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 1498 ரன்களை அடித்தார். ஆனால் நாளடைவில் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறியதால் கடைசியாக கடந்த 2017இல் விளையாடிய அவருக்கு மேற்கொண்டு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனால் மீண்டும் தனது தாய் நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ள அவர் கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்காக களமிறங்கி முக்கிய நேரத்தில் சதமடித்து அசத்தினார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
5. கெப்ளர் வெசல்ஸ்: கடந்த 1982ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக காபாவில் அறிமுகமாகி 162 மற்றும் 42 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய அவர் அடுத்த 4 வருடங்களில் ஆஸ்திரேலிய அணிக்கு 24 போட்டிகளில் முக்கிய வீரராக செயல்பட்டார்.
அதை தொடர்ந்து காயத்தால் விலகிய அவர் 1992ஆம் ஆண்டு தனது தாய் நாடான தென்னாப்பிரிக்கா மீண்டும் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற போது கேப்டனாக செயல்பட்டார். அந்த அணிக்காக 16 போட்டியில் விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார்.
4. ஜான் ட்ரைகோஸ்: கடந்த 1970ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி விளையாடிய அவர் இதர சில வீரர்களை போல தென்னாபிரிக்க வாரியத்தின் நிறைவேறிக் கொள்கையால் வெளியேறினார்.
அதன் பின் 1992ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக 45 வயதில் மீண்டும் களமிறங்கிய அவர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து நல்ல கம்பேக் கொடுத்தார். குறிப்பாக 22 வருடங்கள் கழித்து அடுத்த போட்டியில் விளையாடி உலக சாதனை படைத்த அவர் மேற்கொண்டு 3 போட்டிகளில் விளையாடி கடைசியாக 1993ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போட்டியுடன் ஓய்வு பெற்றார்.
3. அப்துல் ஹபீஸ் காதர்: 1946ஆம் ஆண்டு இந்தியாவுக்காக லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி 3 போட்டிகளில் விளையாடிய அவர் சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்தானுக்காக அறிமுகமாகி அந்நாட்டின் முதல் போட்டியிலேயே கேப்டனாக செயல்பட்டார். மொத்தம் 26 போட்டிகளில் 21 விக்கெட்களை எடுத்த அவர் 927 ரன்களையும் எடுத்து ஆல் ரவுண்டராக விளையாடினார்.
2. இஃப்திகார் அலி கான் பட்டோடி: நவாப் பட்டோடி அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1932ஆம் ஆண்டு இங்கிலாந்துக்காக அறிமுகமாகி சதமடித்து 102 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவிய அவர் மேற்கொண்டு 2 போட்டிகளில் விளையாடினார்.
12 வருடங்கள் கழித்து 1946ஆம் ஆண்டு இந்தியாவுக்காக இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அவர் மொத்தம் இரு நாடுகளுக்கும் தலா 3 போட்டிகள் வீதம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
1. பில்லி மிட்வின்டர்: கடந்த 1887ஆம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய அவர் 2 போட்டிகளில் விளையாடிய நிலையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் இங்கிலாந்துக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
இதையும் படிங்க:IND vs AUS : நீங்க சொல்றது புரியுது ஆனா அதையும் பாப்போம், சௌரவ் கங்குலிக்கு மைக்கேல் கிளார்க் சவால் பதிலடி
அந்த வகையில் 1887 வரை 2 நாடுகளுக்கும் மொத்தமாக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 1890ஆம் ஆண்டு 39 வயதிலேயே உடல்நல கோளாறால் இயற்கை எய்தினார்.



