பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் ஏழாம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் சான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102, ஆகாஷ் சல்மான் 104* ரன்கள் அடித்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஜாக் லீச் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து சுமாராக பந்து வீசிய பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி 823-7 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. குறிப்பாக முல்தான் பிட்ச் 2, 3வது நாட்களில் தார் ரோட் போல இருந்ததை பயன்படுத்தி அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து உலக சாதனை படைத்தது.
6 பவுலர்கள் சதம்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் முச்சதமடித்து 317, ஜோ ரூட் 262, பென் டக்கெட் 84, ஜாக் கிராவ்லி 78 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாய்ம் ஆயுப் 2, நாசீம் ஷா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சொல்லப்போனால் அந்த அணி மொத்தமாக 7 பவுலர்களை பயன்படுத்தியது. அதில் சௌத் ஷக்கீல் 2 ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார்.
மற்றபடி சாகின் அப்ரிடி 26 ஓவரில் 120, நாசீம் ஷா 31 ஓவரில் 157, அப்ரார் அகமது 35 ஓவரில் 174, அமீர் ஜமால் 24 ஓவரில் 126, ஆஹா சல்மான் 18 ஓவரில் 118, சாய்ம் ஆயுப் 14 ஓவரிலேயே 101 ரன்கள் வழங்கினர். அதாவது மற்ற 6 பாகிஸ்தான் பவுலர்கள் சதமடித்து 100க்கும் மேற்பட்ட ரன்களை வள்ளலாக வாரி வழங்கினர். இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக பவுலர்கள் 100க்கும் மேற்பட்ட ரன்களை வழங்கிய அணி என்ற ஜிம்பாப்வேவின் மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் சமன் செய்துள்ளது.
பாகிஸ்தான் திணறல்:
இதற்கு முன் 2004ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணியின் 6 பவுலர்கள் இதே போல 100க்கும் மேற்பட்ட ரன்களை கொடுத்துள்ளனர். அதன் பின் 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணிக்கு அப்துல்லா சபிக் 0, சாய்ம் ஆயுப் 25, கேப்டன் ஷான் மசூத் 11 ரன்களில் அவுட்டானார்கள்.
இதையும் படிங்க: நிச்சயமா இந்த விஷயத்தை நெனச்சி சாம்சனும், அபிஷேக் சர்மாவும் ஃபீல் பண்ணுவாங்க – ஆகாஷ் சோப்ரா
அதே போல பாபர் அசாம் 5, சவுத் ஷாக்கில் 29, முகமது ரிஸ்வான் 10 ரன்களில் அவுட்டாகி பின்னடவை ஏற்படுத்தினர். அதனால் 51-5 என்ற துவக்கத்தை பெற்ற பாகிஸ்தான் நான்காவது நாள் முடிவில் 152-6 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. களத்தில் ஆஹா சல்மான் 41*, அமீர் ஜமால் 27* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் இன்னும் 115 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து எஞ்சிய 4 விக்கெட்டுகளை எடுத்து இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



