ஐசிசி டி20 உ.கோப்பையில் அசத்தும் திறமை பெற்றுள்ள 5 அண்டர் 23 இளம் வீரர்களின் பட்டியல்

Arshdeep Singh IND vs WI
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட டாப் 16 அணிகள் 45 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. என்னதான் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்தாலும் தங்களது நாட்டுக்காக கோப்பையை வெல்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்பை கௌரவமாக கருதும் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி முழுமூச்சுடன் விளையாடுவார்கள் என்பதால் இத்தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அதில் பயமறியாத இளம் காளைகளாக சீறிப் பாயக்கூடிய இளம் வீரர்களின் பங்கு வெற்றிக்கு முக்கியமாகும். அதிலும் குறிப்பாக துடிப்புடன் செயல்பட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு துடிப்பான இளம் வீரர்கள் அவசியமாகும். அந்த வகையில் நல்ல திறமையும் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு தற்சமயத்தில் நல்ல பார்மில் இருப்பதால் இந்த உலக கோப்பையில் அசத்தக்கூடிய சில 23 வயதுக்குட்பட்ட வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ரஹமதுல்லா குர்பாஸ்: ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர இளம் அதிரடி தொடக்க வீரரான இவர் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். தற்போது 20 வயது மட்டுமே நிரம்பியயுள்ள அவர் இதுவரை 32 டி20 போட்டிகளில் 828 ரன்களை 138.46 என்ற அசத்தலான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து வருகிறார்.

குறிப்பாக சமீபத்திய ஆசிய கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் 152 ரன்களை 163.44 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி அதன்பின் நடைபெற்ற கரீபியன் லீக் தொடரில் 167 ரன்களை 140.17 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து தற்போது நல்ல பார்மில் உள்ளார்.

- Advertisement -

4. நாசீம் ஷா: 2019இல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் அதன்பின் பிஎஸ்எல் போன்ற உள்ளூர் தொடர்களில் அசத்தியதால் சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 20வயதில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே ராகுலை டக் அவுட் செய்து மிரட்டிய அவர் வலியுடன் வெற்றிக்கு போராடியது அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது.

அத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அடுத்தடுத்த சிக்சர்களை அடித்து மறக்க முடியாத வெற்றியை பரிசளித்த அவர் இதுவரை 10 போட்டிகளில் 14 விக்கெட்களை 8.01 என்ற எக்கனாமியில் எடுத்து வருவதுடன் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசும் திறமை பெற்றுள்ளார்.

- Advertisement -

3. திரிஷ்டன் ஸ்டப்ஸ்: 2022 சிஎஸ்ஏ டி20 லீக் தொடரில் 293 ரன்களை 183.12 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு அறிமுகமான இவர் இதுவரை 9 போட்டிகளில் 142 ரன்களை 191.89 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வருகிறார்.

வெறும் 22 வயது மட்டுமே நிரம்பியயுள்ள அவர் மிடில் ஆர்டரில் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமையுடன் விரைவில் நடைபெறும் உலகக் கோப்பை உட்பட வருங்காலங்களில் தென் ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2. அர்ஷிதீப் சிங்: சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அசத்தலாக செயல்பட்டு இந்தியாவுக்காக அறிமுகமான 23 வயது இடதுகை பந்து வீச்சாளரான இவர் பவர்பிளே முதல் டெத் ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். குறிப்பாக திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் மிரட்டிய இவர் கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் தடுமாறி இதுவரை 13 போட்டிகளில் 19 விக்கெட்களை 8.14 என்ற எக்கனாமியில் எடுத்து வருகிறார்.

இருப்பினும் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அசத்தலாக செயல்படுவார் என்று நம்பலாம்.

1. ஹரி ப்ரூக்: உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடியதால் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்காக அறிமுகமான இவர் இதுவரை 11 போட்டிகளில் 303 ரன்களை 43.29 என்ற சராசரியிலும் 151.5 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டிலும் குவித்து வருகிறார்.

குறிப்பாக சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 4 – 3 (7) என்ற கணக்கில் இங்கிலாந்து வென்ற டி20 தொடரில் 238 ரன்களை 163.01 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தற்போது நல்ல பார்மில் இருப்பதால் உலகக் கோப்பையிலும் அசத்துவார் என்று நம்பலாம்.

Advertisement