தங்களது ரோல் மாடல்களிடம் இருந்து கனவு தொப்பியை பெற்று அறிமுகமான 5 இளம் வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாட ஆசைப்படும் வீரர்கள் அதற்காக பள்ளி அளவிலான கிரிக்கெட்டிலேயே ஆர்வத்துடன் விளையாடி அடிப்படைகளை தெரிந்து கொண்டு பயிற்சியாளர்களின் உதவியுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்த தொடங்குவார்கள். அப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே நிச்சயமாக அனைத்து இளம் வீரர்களும் ஏற்கனவே சர்வதேச அளவில் தங்களது நாட்டுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை தேடிக்கொண்டிருக்கும் ஒருவரை தங்களது ரோல் மாடலாகவும் குருவாகவும் மனதளவில் பாவிப்பார்கள்.

சொல்லப்போனால் சில இளம் வீரர்கள் அந்த சமயத்தில் நாட்டுக்காக விளையாடி வரலாற்று வெற்றிகளை பெற்று கொடுத்து கொண்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களை பார்த்துதான் உத்வேகமடைந்து கிரிக்கெட்டையே விளையாட துவங்குவார்கள். அப்படி தங்களது ரோல்மாடல் பார்த்து வளரும் இளம் வீரர்கள் சர்வதேச அரங்கில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக அவர்களைப் போலவே மிகச் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக வெற்றியைத் தேடிக் கொடுக்க வேண்டும் என்ற ஊக்கத்துடன் கடுமையாக உழைப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் தொடர்ச்சியான சிறந்த செயல்பாடுகளின் பலனாக நாட்டுக்காக விளையாட தேர்வுக் குழுவால் முதல் முறையாக தேர்வு செய்யப்படுவதே அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் முதல் பரிசாகும்.

- Advertisement -

கனவு தொப்பி:
இருப்பினும் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்துள்ள தேசிய அணியில் நேரடியாக 11 பேர் கொண்ட அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுவது கடினமான ஒன்றாகும். எனவே அதற்காக சில காலங்கள் பெஞ்சில் அமர்ந்திருக்கும் இளம் வீரர்கள் ஒரு வழியாக தங்களுக்கான நேரமும் வாய்ப்பும் கூடி வரும்போது நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.

குறிப்பாக முதல் முறையாக அறிமுகமாகும் அத்தனை வீரர்களுக்கும் தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட கனவு தொப்பியை ஜாம்பவான்கள் கையால் வாங்கி தலையில் அணியும் போதே உணர்ச்சி பொங்கி விடும். அதுவே தாம் ரோல்மாடலாக நினைத்துக் கொண்டிருக்கும் ஜாம்பவான் கையால் வாங்கினால் அது அந்த இளம் வீரருக்கு சொல்ல வார்த்தைகளே இல்லாத தருணமாக அமைந்து தனது கேரியர் அற்புதமாக அமையப்போகிறது என்ற நம்பிக்கையை ஆரம்பத்திலேயே ஆழமாக கொடுத்துவிடும். அந்த வகையில் சமீப கால கிரிக்கெட்டில் தனது ரோல் மாடல்களிடம் தொப்பியை வாங்கிய 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. அலெஸ் கேரி: கடந்த 2021 டிசம்பரில் பிரிஸ்பேன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பராக அறிமுகமான அலெக்ஸ் கேரி தனது தொப்பியை வரலாற்றின் மிகச்சிறந்த ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கையால் வாங்கினார்.

அதற்கு முன்பே கடந்த 2018இல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்த அவர் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்த நிலையில் கில்கிறிஸ்ட் கையால் டெஸ்டில் அறிமுகமான நேரம் தற்போது 3 வகையான ஆஸ்திரேலியாவிலும் முதன்மை விக்கெட் கீப்பராக மாறியுள்ளார்.

- Advertisement -

4. ஜோஸ் ஹேசல்வுட்: வரலாற்றின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் கையில் கடந்த 2014இல் தனது கனவு தொப்பியை வாங்கி இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் அறிமுகமான ஜோஸ் ஹேசல்வுட் அவரைப் போலவே தனது அபாரமான வேகப்பந்துகளால் எதிரணிகளை திணறடித்து பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோருடன் மிரட்டலான வேகப்பந்து வீச்சு கூட்டணியில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இன்று ஆஸ்திரேலியாவின் முதன்மை பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

3. கேஎல் ராகுல்: கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் வீரர் கேஎல் ராகுல் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டதால் கடந்த 2014இல் முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்று 2016இல் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அறிமுகமான அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் அறிமுகமானார்.

- Advertisement -

அந்த 2 போட்டிகளிலுமே அப்போதைய கேப்டனாக இருந்த தனது ரோல் மாடலாக கருதும் எம்எஸ் தோனியிடம் தனது கனவு தொப்பியை உணர்ச்சி பொங்க வாங்கிய கேஎல் ராகுல் சோடை போகாமல் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு பின் இந்தியாவின் ரன் மெஷிணாக சக்கை போடு போட்டு வருகிறார்.

2. ஹார்டிக் பாண்டியா: ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு கடந்த 2016இல் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா அறிமுகமானார். அடுத்த சில மாதங்களில் தன்னுடைய ரோல்மாடலாக நினைக்கும் ஜாம்பவான் கபில்தேவ் கையால் தனது ஒருநாள் கிரிக்கெட் தொப்பியை தரம்சலா மைதானத்தில் நடந்த போட்டியின்போது பெற்று அறிமுகமானார்.

அடுத்த சில வருடங்களிலேயே 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் அளவுக்கு என்று அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

1. ரிஷப் பண்ட்: எம்எஸ் தோனி எனும் மகத்தான விக்கெட் கீப்பருக்கு பின் அவரைப் போன்ற ஒருவர் இந்தியாவுக்கு கிடைப்பாரா என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். அந்த நிலையின் அவரது இறுதிக்கால கட்டமான கடந்த 2018இல் நடந்த அண்டர்-19 உலக கோப்பையில் அசத்தியதால் கௌகாத்தி நகரில் அதே வருடம் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட் தனது மானசீக குருவான தோனியிடம் தனது கனவு தொப்பியை பெற்று அவருடன் இணைந்து விளையாடும் பொன்னான வாய்ப்பையும் பெற்றார்.

தோனி தன்னுடைய ரோல்மாடல் என்று அவரே பலமுறை கூறியுள்ள நிலையில் ஆரம்பத்தில் அவரைப்போலவே தடுமாறினாலும் சமீப காலங்களில் அவரையும் மிஞ்சும் அளவுக்கு சக்கை போடு போட துவங்கியுள்ள ரிஷப் பண்ட் இந்தியாவின் நம்பர் 1 விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார்.

Advertisement