ஐபிஎல் 2023 : மோசமாக செயல்பட்டும் எதற்கென்றே தெரியாமல் தக்க வைக்கப்பட்ட 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Parag-1
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்றது. அதற்கு முன்பாக இத்தொடரில் பங்கேற்கும் 10 கிரிக்கெட் அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று வெளியிட்டன. பொதுவாக விட்டால் பிடிக்க முடியாது என்று கருதும் அளவுக்கு முந்தைய சீசனில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணியின் முக்கிய வீரராக செயல்படும் வீரர்களை மட்டுமே அந்தந்த அணி நிர்வாகங்கள் தக்க வைப்பது வழக்கமாகும்.

ஆனால் இம்முறை சில வீரர்கள் சுமாராக செயல்பட்டும் ஆச்சரியப்படும் வகையில் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக எதற்காக இவர்களை தக்க வைத்தீர்கள் என்று ரசிகர்கள் குழம்பும் அளவுக்கு 2023 ஐபிஎல் சீசனில் தக்க வைக்கப்பட்டுள்ள சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. துஷார் டேஷ்பாண்டே: மும்பையைச் சேர்ந்த இவர் 2021 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 8 விக்கெட்டுகளை எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் சென்னை நிர்வாகம் இந்த வருடம் வாங்கியது. குறிப்பாக தீபக் சஹார் காயமடைந்த நிலையில் முதல் 2 போட்டியில் வாய்ப்பை பெற்ற இவர் 1 விக்கெட் மட்டும் எடுத்து 9.00 என்ற எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார்.

அதை விட 140 கி.மீ வேகத்தை தொட முடியாத இவர் புதிய பந்தை ஸ்விங் செய்ய தடுமாறியதை தெளிவாக பார்க்க முடிந்தது. மேலும் முகேஷ் சௌத்திரி போன்ற தரமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கிடைத்த நிலையிலும் கூட அவரை வெளியிடாமல் சென்னை நிர்வாகம் மீண்டும் தக்க வைத்தது அந்த அணி ரசிகர்களுக்கே ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

4. லலித் யாதவ்: டெல்லி அணிக்காக இந்த வருடம் 65 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இவர் 12 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை 8.33 என்ற எக்கனாமியிலும் பேட்டிங்கில் 161 ரன்களை 110.27 என்ற சராசரியிலும் எடுத்து சுமாராகவே செயல்பட்டார்.

அந்த வகையில் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக எதிர்பார்க்கப்பட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறிய அவர் இளம் வீரராக இருக்கும் காரணத்தால் மீண்டும் டெல்லி நிர்வாகம் தக்க வைத்துள்ளது. இருப்பினும் 65 லட்சங்கள் என்பது அவரது செயல்பாடுகளை வைத்து மீண்டும் தக்க வைப்பதற்கு தகுந்த தொகை கிடையாது என்று கூறலாம்.

- Advertisement -

3. அப்துல் சமட்: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர் 2021 சீசனில் ஓரிரு போட்டிகளில் கடைசி நேரத்தில் சற்று அதிரடியாக ரன்களை குவித்த காரணத்தால் 4 கோடி என்ற பெரிய தொகைக்கு ஹைதராபாத் தக்க வைத்தது. ஆனால் 4 கோடிகளை கொடுத்து வாங்கிய அந்த அணி நிர்வாகம் 2022 சீசனில் தேவையான வாய்ப்புகளை கொடுக்காமல் வெறும் 2 போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்தது.

அதில் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்த அவர் 2 போட்டிகளிலும் சொதப்பலாகவே செயல்பட்டார். அதனால் பெஞ்சில் அமர்ந்து கொண்டே 4 கோடிகளை சம்பாதித்து விட்டார் என்று ரசிகர்கள் அவரை கலாய்த்தனர். ஆனால் மீண்டும் 4 கோடிகள் வைத்துக் கொள்ளுங்கள் என்ற வகையில் சுமாராக செயல்பட்டும் 2023 சீசனுக்காக அவரை ஹைதராபாத் தக்க வைத்துள்ளது ஆச்சரியமாகும்.

- Advertisement -

2. ரியன் பராக்: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2019 சீசனில் ஒரு போட்டியில் இளம் வயதில் அரை சதமடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றி பெற வைத்தார். அதனால் மயங்கிப்போன ராஜஸ்தான் நிர்வாகம் அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதாக எண்ணி இந்த வருடம் கூட 3.80 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைத்தது.

ஆனால் கடந்த 4 வருடங்களில் 2 அரை சதங்களை மட்டுமே எடுத்து சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இந்த வருடம் 17 போட்டிகளில் வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்படி சுமாராக செயல்படுவது மட்டுமல்லாமல் ட்விட்டரில் விராட் கோலியை போல் பெரிய சாதனை படைத்தது போல் வாயில் மட்டும் பேசும் அவரை ரசிகர்கள் கலாய்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அதையும் கடந்து மீண்டும் ராஜஸ்தான் நிர்வாகம், அடுத்த வருடத்திற்கு அவரை தக்க வைத்துள்ளது ஆச்சரியமாகும்.

1. விஜய் சங்கர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் அம்பத்தி ராயுடுவின் கேரியரை முடித்ததை தவிர்த்து இந்தியாவுக்காக பெரிய அளவில் ஜொலிக்காத நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் 4 போட்டிகளில் வெறும் 19 ரன்களை 54.29 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார்.

இதையும் படிங்க: இனி தெறிக்க விடப்போறாங்க – ஏற்கனவே மிரட்டும் இங்கிலாந்து அணியில் 2 வருடங்கள் கழித்து கம் பேக் கொடுக்கும் மிரட்டல் வீரர்

அதனால் தமிழக ரசிகர்களே கிண்டலடித்த அவரை 2023இல் கோப்பையை தக்க வைப்பதற்காக களமிறங்கும் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மீண்டும் ஏன் தக்க வைத்தது என்பது அந்த அணிக்கே வெளிச்சமாகும்.

Advertisement