இனி தெறிக்க விடப்போறாங்க – ஏற்கனவே மிரட்டும் இங்கிலாந்து அணியில் 2 வருடங்கள் கழித்து கம் பேக் கொடுக்கும் மிரட்டல் வீரர்

Eng
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தற்சமயத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளை விட அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அடுத்தடுத்த தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. கிரிக்கெட்டை கண்டுபிடித்தாலும் தொடர் வெற்றிகளை குவிக்க ரொம்பவே தடுமாறிய அந்த அணி கடந்த 2017இல் இயன் மோர்கன் வருகைக்குப்பின் அதிரடி அணுகுமுறையை பின்பற்றி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எதிரணிகளை அடித்து நொறுக்கும் அதிரடி படையாக மாறியது. அதன் பயனாக 2019 உலகக் கோப்பையை வென்ற அந்த அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையும் வென்று சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்ற முதல் கிரிக்கெட் அணியாக உலக சாதனை படைத்துள்ளது.

England T20 World Cup

- Advertisement -

அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜோ ரூட் தலைமையில் சொந்த மண்ணில் கூட திண்டாடிய அந்த அணி கடந்த ஜூன் மாதம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் அதிரடி சரவெடியான அணுகுமுறையை பின்பற்றி எதிரணிகளை புரட்டி எடுத்து தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. அப்படி 3 வகையான கிரிக்கெட்டிலும் அதிரடிப்படையாக மாறி தற்சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் கொடி கட்டி பறக்கும் இங்கிலாந்தை இந்தியா போன்ற இதர அணிகள் பின்பற்ற வேண்டும் என்ற விமர்சனங்களும் காணப்படுகின்றன.

திரும்பும் நட்சத்திரம்:
இந்நிலையில் பாகிஸ்தானில் வெற்றிக் கொடியை நாட்டிய இங்கிலாந்து அடுத்ததாக 2023 புத்தாண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதிரடியான வேகத்தில் பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

archer 1

குறிப்பாக 2019 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நாயகன் ஸ்டீவ் ஸ்மித் மண்டையை பதம் பார்க்கும் அளவுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பவுன்சர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த அவர் 2019 உலக கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் இங்கிலாந்தின் அதிரடிப்படையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த அவர் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாடியிருந்தார். அதன் பின் முழங்கை காயத்தை சந்தித்து குணமடைந்த அவர் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் போது மீண்டும் காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

அதனால் தற்போது அதிக காலங்களை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமடைந்துள்ள அவர் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி கம்பேக் கொடுத்ததால் மீண்டும் இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் 30 விக்கெட்களை எடுத்துள்ள அவர் ஏற்கனவே அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளது அந்த அணியை மேலும் அதிரடி அணியாக மாற்றியுள்ளது. இதனால் அடுத்து வரும் தொடர்களில் இங்கிலாந்து மேலும் தெறிக்க விடும் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் என்று அந்நாட்டு ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

Archer

அவரை போல் காயமடைந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லியும் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் சதங்களை விளாசிய இளம் வீரர் ஹாரி ப்ரூக் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதே டெஸ்ட் தொடரில் அசத்தலாக செயல்பட்ட பென் டூக்கெட் 2016க்குப்பின் 6 வருடங்கள் கழித்து மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அவமானப் படுத்திட்டாங்க, வாங்கவும் மாட்டாங்க – சிஎஸ்கே அணியில் நிழந்த அதிர்ச்சி பின்னணியை பகிர்ந்த ஜோஸ் லிட்டில்

வரும் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெறும் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணி இதோ: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஹாரி ப்ரூக், சாம் கரண், பென் டூக்கெட், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜேசன் ராய், பில் சால்ட், ஓலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் ஓக்ஸ்

Advertisement