
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் இந்தியாவிலேயே நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நடைபெறும் ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை பெரிய தொகை கொடுத்து வாங்குவதற்கு தயாராகியுள்ளன. அதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன், சாம் கரண் போன்ற நட்சத்திர வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அதிக தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ல் விளையாடிய போதிலும் 2010க்குப்பின் எல்லை பிரச்சினை காரணமாக பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் இந்தியா உட்பட அனைத்து அணிகளுக்கும் சவாலை கொடுக்கும் அணியாக திகழும் பாகிஸ்தானில் அப்போதும் இப்போதும் தரமான வீரர்களுக்கு பஞ்சம் கிடையாது. அதனால் ஒருவேளை இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் பெரிய தொகைக்கு விலை போவார்கள் என்று சொல்லக்கூடிய சில பாகிஸ்தான் நட்சத்திர வீரர்களை பற்றி பார்ப்போம்:
5. முகமத் ரிஸ்வான்: இந்த வருடம் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி விமர்சனங்களை சந்தித்தாலும் கடந்த ஜூலை மாதம் வரை அதிரடியாக ரன்களைக் குவித்து தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்த இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்தவர்.
மேலும் ஐசிசியின் சிறந்த டி20 வீரர் விருதையும் வென்றுள்ள இவர் 2021 டி20 உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்தார். அந்த வகையில் தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக திகழும் இவர் நிச்சயமாக பெரிய தொகைக்கு விலை போவார் என்றே கூறலாம்.
4. பாபர் அசாம்: நவீன கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் தரமான பேட்ஸ்மேனாக போற்றப்படும் இவர் தற்சமயத்தில் சுமாரான பார்மில் இருந்தாலும் 2019 – 2021 வரை விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார்.
குறிப்பாக 2021 டி20 உலக கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய இவரும் தரமானவர் என்பதில் சந்தேகமில்லை என்பதுடன் கேப்டன்ஷிப் அனுபவமிக்கவர். அதனால் இவர் இந்த ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் தங்களது கேப்டனாகவும் வாங்குவதற்கு நிறைய அணிகள் பெரிய கோடிகளை செலவிடலாம்.
3. சடாப் கான்: பாகிஸ்தான் அணியில் தற்சமயத்தில் இருக்கும் ஒரே தரமான சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் சமீபத்திய டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 52 (22) ரன்களும் 2 விக்கெட்களும் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
மேலும் ஒட்டு மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 163 விக்கெட்டுகளை சாய்த்துள்ள அனுபவமும் திறமையும் கொண்ட இவரையும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் நிறைய அணிகள் போட்டி போட்டு பெரிய தொகைக்கு வாங்குவதற்கு முயற்சிக்கும் என்று கூறலாம்.
2. ஹரிஷ் ரவூப்: பாகிஸ்தான் என்றாலே வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கும் தொழிற்சாலை என்பார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள இவர் இதுவரை 72 விக்கெட்களை எடுத்து 145 – 150 கி.மீ வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார்.
மேலும் ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடரிலும் விளையாடி நல்ல அனுபவத்தை பெற்ற இவர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் நிச்சயம் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று உறுதியாக சொல்லலாம்.
1. ஷாஹீன் அஃப்ரிடி: பொதுவாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தனித்துவமான திறமையும் மவுசும் இருக்கும். அந்த வகையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே பாகிஸ்தானின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள இவர் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார் என்றே சொல்லலாம்.
குறிப்பாக 2021 டி20 உலக கோப்பையில் இந்தியாவை முதல் முறையாக தோற்கடிக்க ஆட்டநாயகன் விருது வென்ற முக்கிய பங்காற்றிய இவர் 2022 பிஎஸ்எல் தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் கேப்டனாக லாகூர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அந்த வகையில் இவர் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் நிச்சயமாக பாபர் அசாம் உள்ளிட்ட இதர பாகிஸ்தான் வீரர்களை காட்டிலும் அதிக தொகைக்கு விலை போவார் என்று வெளிப்படையாக சொல்லலாம்.