பகையாளியான ஆஸ்திரேலிய வீரர்களிடம் அன்பை காட்டிய 5 இந்திய வீரர்களின் ஜென்டில்மேன் தருணங்கள் – சிறப்பு பதிவு

Kohli-Smith
- Advertisement -

5 உலக கோப்பைகளை வென்று கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழும் ஆஸ்திரேலியாவை எந்த ஒரு போட்டியிலும் வீழ்த்துவது கடினமாகும். ஏனெனில் வெற்றி பெறுவதற்காக முழுமூச்சுடன் முழுத் திறமையை வெளிப்படுத்தி போராடும் அவர்கள் தோல்வியின் பிடியில் சிக்கினாலும் அதிலிருந்து மீண்டெழுந்து போராடி வெற்றி பெறும் மன உறுதி கொண்டவர்கள். மேலும் ஸ்லெட்ஜிங் எனப்படும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு எதிரணியினரின் கவனத்தை சீர்குலைத்து வெற்றி பெறும் யுக்தியை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்திய அவர்கள் எப்போதுமே ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர்கள்.

இருப்பினும் உலகிலேயே ஆஸ்திரேலியாவை அடக்கக் கூடிய முதன்மையான அணி இந்தியா என்பதற்கு 2001இல் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வென்று வந்த வெற்றி நடையை கொல்கத்தா டெஸ்டில் நிறுத்தியதும், 2011இல் உலக கோப்பையில் தோற்கடித்ததும், 2016இல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்ததும், 2019 மற்றும் 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வென்றது போன்றவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம். அதே போல் ஸ்டீவ் வாக்கை கடுப்பேற்றிய சௌரவ் கங்குலி முதல் மிச்செல் ஜான்சனுக்கு விராட் கோலி கொடுத்த பதிலடி வரை வரலாற்றில் ஆஸ்திரேலியர்களுக்கு நிகராக இந்தியர்களும் சவாலை கொடுத்தவர்களாகவே உள்ளனர்.

- Advertisement -

அன்பும் ஆதரவும்:
ஆனாலும் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலிய வீரர்கள் மீது முக்கிய தருணங்களில் இந்திய வீரர்கள் அன்பும் அரவணைப்பும் காட்டிய 5 தருணங்களை பற்றி பார்ப்போம்:
5. கரிசனமான ராகுல்: 2020 டிசம்பரில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா நிர்ணயித்த 304 ரன்கள் இலக்கை துரத்தும்போது 117/3 என தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு இளம் வீரர் கேமரூன் கிரீன் களமிறங்கினார்.

மிகவும் இளம் வீரராக இருந்த அவரிடம் அப்போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்த இந்திய வீரர் கேஎல் ராகுல் “என்னிடம் பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறதா” என்று தாமாக முன்வந்து கேட்டு “பதற்றமடையாமல் சிறப்பாக விளையாடுங்கள்” என்ற ஊக்கத்தை கொடுத்ததாக போட்டி முடிந்த பின் கேமரூன் கிரீன் தெரிவித்தது ரசிகர்களை நெகிழ வைத்தது.

- Advertisement -

4. பண்ட்டின் ஆதரவு: ஆஸ்திரேலியர்களை அடித்து நொறுக்கும் லேட்டஸ்ட் நாயகனாக உருவெடுத்துள்ள ரிஷப் பண்ட் ஐபிஎல் 2022 தொடரில் தனது தலைமையில் முதல் முறையாக முதல் போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் 24 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோது ஆதரவு கொடுத்தார்.

அன்றைய நாளில் போட்டி முடிந்த பின் பேசிய அவர் “மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் அதற்காக மார்ஷை குற்றம் சொல்ல முடியாது. இவை அனைத்தும் விளையாட்டின் ஒரு அங்கமாகும்” என்று கேப்டனாக ஆதரவு தெரிவித்தது அனைவரின் பாராட்டை பெற்றது.

- Advertisement -

3. மனுஷன் சிராஜ்: 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை மீண்டும் இந்தியா வென்று சரித்திரம் படைத்தது. அந்த தொடருக்கு தயாராவதற்கு ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ஆரம்பத்திலேயே பயிற்சி போட்டியில் களமிறங்கிய இந்தியாவுக்கு பேட்ஸ்மேனாக ஜஸ்பிரித் பும்ரா அதிரடியாக அடித்த ஒரு பந்து அதை வீசிய கேமரூன் கிரீன் தலையில் பட்டது.

அதனால் அப்படியே களத்தில் சாய்ந்த அவருக்கு என்ன ஆயிற்று என்ற பதற்றத்துடன் எதிர்ப்புறம் இருந்த மற்றொரு இந்திய வீரர் முகமது சிராஜ் க்ரீஸ் விட்டு வெளியேறினால் ரன் அவுட்டாகி விடுவோம் என்ற கவலை இல்லாமல் முதலில் உயிர் முக்கியம் என அவரது அருகே ஓடி சென்று பார்த்தது ஆஸ்திரேலிய ரசிகர்களின் நெஞ்சங்களைக் தொட்டது.

- Advertisement -

2. அன்பு பரிசு: ஆஸ்திரேலியா போன்ற சுழலுக்கு சாதகமில்லாத ஆடுகளங்களில் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்குப்பின் தனது திறமையால் 400க்கும் டெஸ்ட் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வரும் நேதன் லயன் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின்போது காபாவில் இந்தியா பதிவு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியாக விளையாடினார்.

அப்போட்டியில் அவருடைய அணி தோற்றாலும் அவருடைய அந்த மைல்கல் சாதனையை பாராட்டும் வகையில் இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை கேப்டனாக ரஹானே பரிசளித்தது அனைவரின் பாராட்டை பெற்றது.

1. மனதை வென்ற கிங்: பந்தை சேதப்படுத்திய வழக்கில் தடை பெற்று மீண்டு வந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 2019 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது சில இந்திய ரசிகர்கள் அவரை கிண்டலடிக்கும் வகையில் கூச்சலிட்டனர். அதனால் அதிருப்தியடைந்த கேப்டன் விராட் கோலி “அவரை கைதட்டி பாராட்டாமல் என்ன செய்கை செய்கிறீர்கள்” என்ற வகையில் உரிமையுடன் இந்திய ரசிகர்களை கண்டித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதை பார்த்து ஜாம்பவான்கள் வார்னே மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் விராட் கோலியை பாராட்டிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தும் களத்திலேயே நன்றி தெரிவித்தார். அத்துடன் அவரது அந்த செயலை பாராட்டி அடுத்த வருடமே “ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” என்ற விருதை விராட் கோலிக்கு ஐசிசி பரிசளித்தது ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

Advertisement