நல்ல பார்மில் இருந்த போதும் கட்டாயத்தால் ஓய்வு பெற்ற 5 இந்திய வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

Ravi Shastri
- Advertisement -

சர்வதேச அளவில் தங்களது நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் அந்த உயரத்தை எட்டுவதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நிறைய வருடங்கள் கடினமாக உழைத்து தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்து கடுமையான போராட்டத்திற்குப் பின் வாய்ப்பு பெறுவார்கள். அப்படி போராடி கிடைக்கும் வாய்ப்பில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஒருசில போட்டிகளுக்கு பின் மிகச் சிறப்பாகச் செயல்பட்டால்தான் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற முடியும். அந்த வகையில் தங்களது அபார திறமையால் ஒரு கட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு நல்ல அனுபவத்தையும் முன்னேற்றத்தையும் கண்டு அணியில் நிலையான இடத்தைப் பிடிப்பார்கள்.

அப்படி நல்ல வளர்ச்சியைக் காணும் கிரிக்கெட் வீரர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் வயது காரணமாக ஓய்வு பெறுவது யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகும். அதிலும் இந்தியா போன்ற நாட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் கடைசிவரை விளையாட வேண்டும் என்ற ஆசையுடன் அவ்வளவு எளிதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட மாட்டார்கள். அதில் சுனில் கவாஸ்கர் போன்ற குறிப்பிட்ட சில வீரர்கள் மட்டுமே வரலாற்றில் சரியான நேரத்தில் விடை பெற்றுள்ளார்கள். இருப்பினும் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் போன்றவர்கள் முடிந்தளவு நீண்ட வருடங்கள் விளையாடி ஓய்வு பெற்றார்கள்.

- Advertisement -

கட்டாயத்தால் ஓய்வு:
ஆனால் சில வீரர்கள் நல்ல பார்மில் நீண்ட நாட்கள் தொடர்ந்து விளையாடலாம் என்ற கனவுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று காயம் போன்ற ஏதேனும் எதிர்பாராத அம்சங்களால் துரதிஷ்டவசமாக பரிதாபமாக ஓய்வு பெற வேண்டிய நிலைமைக்கு உள்ளவர்கள். அந்த வகையில் இந்திய வரலாற்றில் நல்ல பார்மில் இருக்கும் போது கட்டாயத்தால் ஓய்வுபெற்ற 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. நாரி கான்ட்ராக்டர்: முன்னாள் இந்திய கேப்டனான இவர் 31 டெஸ்ட் போட்டிகளில் 1611 ரன்களை 31.58 என்ற அந்த காலத்து நல்ல சராசரியில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பார்படாஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த ஒரு போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சாளர் சார்லி க்ரிபித் வீசிய ஷார்ட் பந்தால் தலையில் அடி வாங்கி காயமடைந்தார்.

- Advertisement -

அந்த காலத்தில் ஹெல்மெட் இல்லாத நிலையில் கடுமையான காயத்தை சந்தித்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாளடைவில் அதிலிருந்து குணமடைந்த போதிலும் மேற்கொண்டு கிரிக்கெட்டில் விளையாட முடியாத அவர் 28 வயதில் ஓய்வு பற்றி அறிவிக்கவில்லை என்றாலும் அதுவே கடைசி போட்டியாக அமைந்தது.

4. சலில் அன்கோலோ: மிகப்பெரிய சரித்திர சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கருடன் ஜோடியாக 1989இல் அறிமுகமான இவர் 1997 வரை வெறும் ஒரு டெஸ்ட் மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு அடிக்கடி இடையிடையே காயங்களை சந்தித்த அவர் தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலைமைக்கு உள்ளானர்.

- Advertisement -

திரும்பத் திரும்ப காயங்களை சந்தித்த காரணத்தால் ஒரு கட்டத்தில் மனமுடைந்த அவர் 28 வயதிலேயே ஓய்வை அறிவித்து நடிப்பு துறையின் பக்கம் சென்றார். சர்வதேச அளவில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் 54 போட்டிகளில் 181 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் கடந்த 2020இல் மும்பை உள்ளூர் அணியின் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

3. சபா கரீம்: தற்போது இந்திய அணியை பற்றி கருத்துக்களை கூறுபவராகவே நிறைய ரசிகர்கள் இவரை அறிய முடியும். ஆனால் 1997 – 2000 வரை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடிய இவர் ஒரு டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார்.

- Advertisement -

கடந்த 2000இல் டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஒரு போட்டியில் அனில் கும்ப்ளே வீசிய ஒரு பந்தை தடுக்க முயற்சித்த அவரது வலது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலைமையை சந்தித்த அவர் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராக நயன் மோங்கியா வந்ததால் 32 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2. பிராகியன் ஓஜா: ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினின் சுழல் பந்துவீச்சு ஜோடி பார்ட்னராக அசத்திய இவர் 2009 – 2013 வரையிலான காலகட்டத்தில் 24 டெஸ்ட் போட்டிகளில் 113 விக்கெட்டுகளை அள்ளினார். அதிலும் ஜாம்பவான் சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இவருக்கு அதுவே கடைசி போட்டியாக அமைந்தது.

ஏனெனில் அவரின் பந்துவீச்சு ஆக்சனில் சில சந்தேகங்கள் எழுந்ததுடன் ரவீந்திர ஜடேஜா போன்ற மேலும் நிறைய இளம் சுழல்பந்து வீச்சாளர்கள் வந்ததால் அணியில் இடம் கிடைக்காமல் போனது. அதனால் 33 வயதிலேயே கடந்த 2020இல் ஓய்வுபெற்ற இவர் தற்போது வர்ணனையாளராக செயல்படத் துவங்கியுள்ளார்.

1. ரவி சாஸ்திரி: இந்தியாவின் மகத்தான சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 1983 உலக கோப்பையை வென்ற அணியில் முக்கிய இடம் வகித்து 1981 – 1992 வரை 230 சர்வதேச போட்டிகளில் 6500க்கும் மேற்பட்ட ரன்களையும் 280 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். அதிலும் 1985இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் தொடர் நாயகன் விருதை வென்று அப்போதே ஆடி காரை பரிசாக வென்ற இவர் ஜாம்பவான் ஷேன் வார்னே அறிமுகமான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தினார்.

இருப்பினும் இடையிடையே காயங்களை சந்தித்த இவர் 31 வயதிலேயே மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் முன்கூட்டியே ஓய்வு பெற்றார். ஆனாலும் வர்ணனையாளராக அவதாரமெடுத்து ரசிகர்களின் மனதில் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கும் அவர் 2017 – 2021 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டு புகழ் பெற்றுள்ளார்.

Advertisement